உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற இந்திய சுகாதார அமைப்புகள்: மோடி அரசின் கீழ் அடுத்த கட்டத்தில் இந்தியா!
பெருந்தொற்று நிதியம் தொடர்பான வழிகாட்டுதல் கருத்தரங்கை மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது.
அண்மையில் தொடங்கப்பட்ட பெருந்தொற்று நிதியம் தொடர்பான வழிகாட்டுதல் கருத்தரங்கை புதுதில்லியில் மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது. மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், பெருந்தொற்று நிதியத்தின் செயலாளர் பிரியா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ராஜேஷ் பூஷன், உலகளாவிய சுகாதார ஒத்துழைப்பு மற்றும் தகவல் பகிர்வு அவசியம் என்று வலியுறுத்தினார். குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு இவற்றை பகிர வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
நோய் கண்காணிப்பு மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய சுகாதார அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோவின், ஆரோக்கிய சேது செயலி உள்ளிட்டவை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த கருத்தரங்கில் பேசிய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் அகர்வால், பெருந்தொற்று நிதியத்தின் செயல்பாடுகள் இந்தியாவின் G20 சுகாதார முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைப்புத் தளம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், உலகளாவிய சுகாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
Input & Image courtesy: News