கோடைக்காலத்தில் போதுமான அளவில் மின்சாரம் கிடைக்கும்: மத்திய அரசு கூறிய அறிவுரை!
கோடைக்காலத்தின் போது போதுமான அளவில் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும் மத்திய அரசு..
கோடைக்காலத்தின் போது போதுமான அளவில் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய மின்சார அமைச்சகம் பன்முனை உத்திகளை வகுத்துள்ளது. மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் கடந்த 7-ந் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மின்சாரத்துறை, நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். வரும் மாதங்களில் குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மின்சாரத்தேவை அதிகளவில் இருக்கும் என்பதால் அதனை சமாளிக்கும் பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த உத்திகளின் ஒரு பகுதியாக, நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி நிலையங்களில், முன்கூட்டியே தேவையான அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ளுமாறு மின் பயன்பாட்டு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் பற்றாக்குறை காலத்தில் இது போன்ற பராமரிப்பு பணிகளுக்கான தேவை இருக்காது. இறக்குமதி நிலக்கரியை அடிப்படையாக கொண்ட அனல் மின் நிலையங்கள் மார்ச் 16-ந் தேதி முதல் முழு உற்பத்தித் திறனுடன் இயங்குமாறு பிரிவு 11-ன் கீழ் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பு வைக்கப்படும்.
கூடுதலாக 4000 மெகாவாட் வாயு அடிப்படையிலான மின்திறனை மற்ற அமைப்புகள் மூலம் அதிகரிக்கப்படும். கோடை மாதங்களில் போதுமான அளவு வாயு விநியோகத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக கெய்ல் நிறுவனம் அமைச்சகத்திற்கு உறுதி அளித்துள்ளது. அடுத்த மாதத்தில் உற்பத்திக்குப் போதுமான அளவு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் நடப்பு மாதத்தில் தண்ணீரை பயன்படுத்துமாறு அனைத்து புனல் மின் நிலையங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
Input & Image courtesy: News