மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்த கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியை தழுவினார்.
இருப்பினும், பெரும்பான்மை பெற்றதால் அவர் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், முதல்வர் பதவியில் அவர் நீடிக்க எம்.எல்.ஏ பதவி தேவைப்பட்டது. இதனால் பவானிபூர் எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அங்கு போட்டியிட மம்தா பானர்ஜி மனுதாக்கல் செய்துள்ளார்.
பவானிபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தாது என அறிவித்துள்ள நிலையில் பாஜக தனது வேட்பாளரை அங்கு களத்தில் இறக்கியுள்ளது. பாஜக சார்பில் பிரியங்கா திப்ரிவல் போட்டியிட உள்ளார். இந்த தொகுதி பொறுப்பாளராக மாநில துணை தலைவர் திலீப் கோஷ் நியமிக்கபட்டுள்ளார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே மம்தா முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்பதால் பவானிபூர் தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது