உத்தரகண்ட் பனிப்பாறை உடைந்து பெருவெள்ளம்! வருத்தம் தெரிவித்த உலக தலைவர்கள்!

உத்தரகண்ட் பனிப்பாறை உடைந்து பெருவெள்ளம்! வருத்தம் தெரிவித்த உலக தலைவர்கள்!

Update: 2021-02-08 18:04 GMT

உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 100க்கும் மேற்பட்டோர் அடித்துச்செல்லப்பட்ட சம்பவத்திற்கு உலக தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் என்ற இடத்தின் அருகே நீர் மின் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் உள்ள தௌலிகங்கா ஆற்றில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

அச்சமயம் நீர் மின் திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 100 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் தபோவான் நீர் மின் திட்ட கட்டுமானத்தில் ஒரு பகுதி சேதமடைந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள குகையில் சிக்கிக் கொண்ட 15க்கும் மேற்பட்டோரை இந்திய – திபெத் எல்லை காவல்துறையினர் மீட்டனர்.

சமோலி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டனர். இந்நிலையில் இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், "உத்தராகாண்ட் பனிப்பாறை வெள்ளம் தொடர்பாக தாமும், தமது அலுவலகமும் தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை கண்காணித்து வருவதாகவும், இந்த பேரிடருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த தேசமே உத்தராகாண்ட் மாநிலத்திற்கு துணை நிற்கும் என்றும், அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க நாடேபிரார்த்தனை செய்வதாகவும்" தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், "உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு சம்பவத்திற்கு பலர் தங்களது வருத்தங்களை தெரிவித்துள்ளனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பதிவில், உத்தரகண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளவர்கள் குறித்தும், இந்தியா குறித்துமே எனது சிந்தனை உள்ளது. பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் உதவியை வழங்க தயாராக இருப்பதாகவும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து தெரிவிக்கையில்,"இந்தியாவில் பனிப்பாறை வெடிப்பு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல். இறந்தவர்களின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நாங்கள் துக்கப்படுகிறோம், காயமடைந்தவர்கள் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Similar News