இந்திய விடுதலை போராட்டத்தின் போது 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கத்தை முதலில் முழங்கியவர் ஒரு தமிழர் என்றும் இதை கேட்ட நேதாஜி இந்த முழக்கத்தை உலகம் முழுவதும் பரப்பினார் என்பதும் அதே வீரத்தமிழன் ஹிட்லரையே எழுத்து வடிவம் மூலம் மன்னிப்பு கேட்க வைத்தார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்தப் பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர் ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை முதலில் முழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த செண்பகராமன் பிள்ளை.
ஆங்கிலேயரிடம் அடிமைபட்டு கிடந்த இந்திய மக்களிடம் நாட்டுப்பற்றை விதைக்கவும், விடுதலை வேட்கையை வளர்க்கவும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களால் முழங்கப்பட்ட முழக்கம் 'ஜெய்ஹிந்த்'. வெல்க இந்தியா, இந்தியா நீடூடி வாழ்க , இந்தியாவிற்கு வெற்றி என்பதன் சுருக்கமே ஜெய்ஹிந்த். இந்தியா விடுதலை பெற்ற நாளான ஆகஸ்ட் 15, 1947 ஆம் நாள் அனைத்து அஞ்சல்களிலும் ஜெய்ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல் முத்திரையாகப் பதிக்கப்பட்டது.
அனைத்து வானொலி நிலையங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஜெய்ஹிந்த் என்று சொல்லி முடிப்பர். 1947இல் நடந்த இங்கிலாந்து அரசி எலிசபத் – பிலிப் திருமணத்திற்கு மகாத்மா காந்தி தன் கையால் 'ஜெய்ஹிந்த்' என்ற வெற்றி முழக்கச் சொல்லை இழைத்த சால்வையை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அன்று தொடங்கி இன்று வரை ஜெய்ஹிந்த் மற்றும் வந்தே மாதரம் என்று முழங்கி இந்தியர்கள் தங்களின் தேச பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதலில் முழங்கியவர் செண்பகராமன் என்ற தமிழர் தான்.