குழந்தைகள் காப்பகத்தில் பணிப்பெண்ணுக்கு நடந்த கொடுமை - 4 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை!
குழந்தைகள் காப்பகங்கள் என்ற பெயரில் தன்னார்வ அமைப்புகள் பல, குறிப்பாக கிறிஸ்தவ அமைப்புகள், பெற்றோர் இருக்கும் குழந்தைகளை அநாதைகளாகக் காட்டி வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவது, அதன் மூலம் வசதியாக வாழ்வது, செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்டு குழந்தைகளுக்கு காப்பகங்களில் நடக்கும் கொடுமைகளை மறைப்பது என்று பல கொடூர செயல்களில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன. தற்போது அத்தகைய செய்தி ஒன்று ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்துள்ளது.
ஒடிசா மாநிலம் மார்ஷகய் என்ற கிராமத்தில் அரசு நிதி உதவியுடன் ஒரு குழந்தைகள் காப்பகம் செய்யப்பட்டு வந்துள்ளது. அங்கு வேலை பார்த்த பணிப்பெண் ஒருவரை 60 வயதான சக காப்பக பணியாளர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்தது தெரிய வந்த நிலையில் ஒடிசா காவல் துறை அவரைக் கைது செய்துள்ளது.
லுத்தரன் மகிளா சமிதி என்ற கிறிஸ்தவ அமைப்பு நடத்தி வந்த காப்பகத்தில் குஞ்ச்பிகாரி தாஸ் என்பவர் 2015 முதல் பணியாற்றி வந்துள்ளார். இங்கு பணியாற்றி வரும் 35 வயதான பெண் ஒருவரை குஞ்ச்பிகாரி தாஸ் மற்றும் காப்பக உரிமையாளரின் சகோதரர் ஆகிய இருவரும் கடந்த 4 வருடங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக ஒடிசா குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆணையம் விசாரணையைத் தொடங்கிய போது இது உண்மை தான் என்றும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதால் அந்தப் பெண் இரு முறை கருத்தரித்து 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் குழந்தை பெற்றதாகவும் தெரிய வந்தது.
குஞ்ச்பிகாரியால் இந்தக் கொடுமைக்கு ஆளான அந்தப் பெண் அவனால் உருவாக்கப்பட்ட குழந்தையை 2016ல் பெற்றெடுத்துள்ளார். பின்னர் காப்பக உரிமையாளர் பிரமிளா தியிபாதியின் சகோதரர் ஜகந்நாத் திரிபாதியும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இதன் விளைவாக 2018ல் மற்றொரு குழந்தை பிறந்துள்ளது. இந்த இரு குழந்தைகளையும் பிரமிளா தாயின் சம்மதமின்றி விலைக்கு விற்ற அதிர்ச்சித் தகவலும் இந்த விசாரணையில் வெளியாகி உள்ளது.