எரிவாயு சிலிண்டர்கள் ஸ்டாக் வைப்பு, ராணுவத்துக்காக பள்ளிக் கட்டடங்கள் தயார் நிலை - என்ன நடக்கிறது காஷ்மீரில்.?

எரிவாயு சிலிண்டர்கள் ஸ்டாக் வைப்பு, ராணுவத்துக்காக பள்ளிக் கட்டடங்கள் தயார் நிலை - என்ன நடக்கிறது காஷ்மீரில்.?

Update: 2020-06-30 01:30 GMT

லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைக்குமாறும் காஷ்மீர் பள்ளத்தாக்கை லடாக்குடன் இணைக்கும் கந்தர்பல் மாவட்ட நிர்வாகத்தை பள்ளிக் கட்டடங்களை காலி செய்து ராணுவத்திற்காக தயார் செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் இட்டுள்ள உத்தரவுகளால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் போர் வருமோ என்ற பதற்றமும் பரபரப்பும் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜுன் 26 அன்று அனுப்பப்பட்ட இந்த அரசு உத்தரவில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி மண்சரிவு/பனிச்சரிவு ஏற்படுவதால் "மிக அவசரம்" என்று குறிப்பிட்டு 2 மாதங்களுக்கு தாக்குப் பிடிக்கும் அளவு எரிவாயு சிலிண்டர்களை ஸ்டாக் வைக்குமாறு தொடர்புடைய துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், கோடைக் காலத்தில் பனிச்சரிவு மிகக் குறைவாகவே ஏற்படும் என்பதால் இந்த மாதிரி உத்தரவுகள் பெரும்பாலும் பனிக்காலம் தொடங்க சற்று முன்னர் மட்டுமே இடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ‌

உள்ளூர் வாசிகளோ 2019 பிப்ரவரி மாதத்தில் பாலாகோட் வான்வெளித் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னும் ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்படும் முன்னும் இதே போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக நினைவு கூறுகின்றனர். கடந்த முறைமைகளைப் போல் இந்த முறையும் இந்த அரசு‌ உத்தரவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

ஸ்ரீநகரில் கடை வைத்திருக்கும் அகமது பங்ரூ கூறுகையில், "இன்னொரு ஊரடங்குக்கோ அல்லது போர் சூழ்நிலைக்கோ தயாராக இருக்கும்படி கூறுவது போல் தெரிகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே பெருமளவில் துருப்புகளும் பீரங்கிகளும் நெடுஞ்சாலையில் செல்வதைப் பார்க்க முடிகிறது" என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா "இந்த அரசு உத்தரவுகள் காஷ்மீரில் பதட்டத்தை உண்டாக்கிக் கொண்டு இருக்கின்றன. போன வருடம் கூறிய பொய்கள் மற்றும் தவறான உத்தரவாதங்களுக்குப் பின்னர் அரசு விளக்கமளித்தாலும் அதை நாங்கள் யாரும் நம்பப் போவதில்லை. எனினும் இந்த உத்தரவுகளைப் பற்றி விளக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தலைமைக் காவல் கண்காணிப்பாளர் கந்தர்பல் மாவட்ட காவல்துறையினருக்கு அனுப்பிய மற்றொரு சுற்றறிக்கையில் ஜுலை 21 முதல் ஆகஸ்ட் 3‌ வரை நடக்கும் அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்க வரும் பாதுகாப்பு படையினருக்காக 16 பள்ளிக் கட்டடங்களை காலி செய்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் அமர்நாத் யாத்திரைக் காலத்தை 60 நாட்களில் இருந்து 15 நாட்களாக காஷ்மீர் நிர்வாகம் குறைத்துள்ளதோடு கந்தர்பல் மாவட்டத்திலிருந்து சோனாமார்க் என்ற ஒரு வழியில் மட்டுமே யாத்திரைக்கு அனுமதித்துள்ளது.

ஒரு மூத்த அதிகாரி கூறியதாக எகானாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் "காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து லடாக் எல்லைக்கு படைகள் நகரத்தப்படுவதால் பள்ளத்தாக்கு பகுதியை பாதுகாக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வருடம் குரோனா பாதிப்பால் அமர்நாத் யாத்திரை குறைவான அளவிலும் பெயருக்குமே நடக்கிறது என்பதால் இது காரணமாக இருக்க வாய்ப்பில்லை" என்று கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும் பிரதேச ஆணையர் இந்த அரசு உத்தரவுகள் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தருணங்களில் இடப்பட்டவை என்றும் எல்லை பதற்றத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

Similar News