30 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 4 1/2 கிலோ கோவில் நகைகள்- அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பு.!

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருட்டு போன தங்க நகைகள்

Update: 2021-02-20 15:13 GMT

நாகர்கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன 4½ கிலோ தங்க நகைகள் எடை சரிபார்க்கப்பட்டு அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாகர்கோவில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 1989ஆம் ஆண்டு கோவில் நகைகள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் திருவட்டார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கோவிலில் இருந்த 6½ கிலோ தங்க நகைகள் திருட்டு போயிருப்பதும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் கோவில் பூசாரிகள் என்பதும் தெரியவந்தது. பின்னர் இவர்களிடமிருந்து 4½ கிலோ எடை மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டது.

இந்த வழக்கில் 23 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கோவிலுக்கு சொந்தமான தங்க நகைகள் நீதிமன்ற உத்தரவின்படி நாகர்கோவிலில் உள்ள அரசு கருவூலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது கோவில் நிர்வாகம் மற்றும் குமரி மாவட்டம் இந்து அறநிலையத் துறை சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மீட்கப்பட்ட தங்க நகைகள் குமரி மாவட்ட இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் மீட்கப்பட்ட கோவில் நகைகளை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட 4½ கிலோ எடை மதிப்புள்ள தங்க நகைகள் நாகர்கோவில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் நீதிபதி கிறிஸ்டியன் முன்னிலையில் நகைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.


​​​

Similar News