ஆப்கானிஸ்தானிலுள்ள இந்தியர்களின் நிலை குறித்து வெளியுறவு அமைச்சகம் அளித்த நம்பிக்கை செய்தி !
ஆப்கானிஸ்தான் நிலையை மத்திய அரசு கண்காணித்து வருகிறது - மத்திய வெளியுறவுத்துறை
ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தலிபான்களின் ஆளுகையில் இருந்து வெளியேறும் நோக்குடன் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டிருக்கிறார்கள்.
யாரையும் கொல்ல மாட்டோம், தாக்க மாட்டோம், யாருடைய உரிமையையும் பறிக்க மாட்டோம் - ஆனால், இஸ்லாமிய முறையிலான ஆட்சியை வழங்குவோம் என தலிபான்களின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரக அதிகாரிகள், குடும்பத்தினரை மீட்க சி-17 விமானம் காபூலில் தரையிறங்கி உள்ளது. 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காபூலில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் காபூலில் பாதுகாப்பு நிலைமை கடந்த சில நாட்களாக கணிசமாக மோசமடைந்துள்ளது. இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வருகிறோம், இந்தியாவுக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image : TOI