கொந்தகை அகழாய்வில் முதல்முறையாக குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு.!

கொந்தகை அகழாய்வில் முதல்முறையாக குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு.!

Update: 2020-06-23 12:56 GMT

கடந்த வெள்ளிக்கிழமை ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகளின் போது கீழடியிலிருந்து 2கிமீ தொலைவில் இருக்கும் கொந்தகை கிராமத்தில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டது. கொந்தகை ஒரு இடுகாடாக இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

75செமீ உயரம் இருந்த அந்தக் குழந்தையின் எலும்புக்கூடு இரண்டு‌ முதுமக்கள் தாழிகளுக்கு இடையே அரை மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் குழந்தையின் பாலினம் என்ன என்று தெரிந்துவிடும் என தொல்லியல் துறை இணை இயக்குநரும இந்த அகழாய்வு பணியின் பொறுப்பாளருமான சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு பெரியவர்களின் எலும்புக்கூடுகளும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து மொத்தமாக இதுவரை 15 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்ட அகழாய்வின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாக கருதப்படும் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயம் அகரம் கிராமத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் நாமம் போன்ற ஒரு குறியீடும், நடுவில் சூரியன் மற்றும் கீழ்ப்பகுதியில் சிங்கம் போன்று தோற்றமளிக்கும் உருவங்களும் அச்சிடப்பட்டுள்ளன. மறு பக்கத்தில் 12 புள்ளிகளும் அதற்குக் கீழே இரண்டு கைகளும் கால்களும் உடைய ஒரு உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. சில ஓடுகளும் பானைகளும் கூட அகழ்வாராய்ச்சி நடைபெறும் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு தொல்லியல்துறை துறை கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் காலம் பொயுமு 1ம் நூற்றாண்டிலிருந்து பொயு 6ம் நூற்றாண்டுக்குள் கணக்கிடப்படலாம் என்று தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே கணிக்கப்பட்ட பொயு 3ம் நூற்றாண்டை விட 300 வருடங்கள் பழமையானது. "கங்கைச்‌ சமவெளியில் நகரமயமாதல் நிகழ்ந்த அதே காலத்தில், அதாவது பொயு 6ம் நூற்றாண்டில் தான் வைகைச் சமவெளியிலும் நகரமயமாதல் நிகழ்ந்திருக்கிறது" என்று தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் கூறியுள்ளார். 2017-18 ஆம் ஆண்டுகளில் நடந்த நான்காம் கட்ட அகழாய்வின் போது கிடைத்த 5,820 தொல்பொருட்களின் காலக் கணிப்பிலிருந்து இந்த தகவல் கிடைத்துள்ளது.

இங்கு கிடைத்த 50க்கும் மேற்பட்ட பானையோடுகளில் தமிழ் பிராமி எழுத்து வடிவம் உபயோகிக்கப்பட்டிருந்தது. எனவே மக்கள் பொயு 6ம் நூற்றாண்டிலேயே கல்வி கற்று எழுதவும் அறிந்திருந்தனர் என்று தெரிய வருகிறது. மேலும் பசு, காளை, எருமை, ஆடு, செம்மறியாடு, நீல்கை இன மான், பிளாக்பக் இன் மான், காட்டுப் பன்றி மற்றும் மயில் போன்ற விலங்குகளின் எலும்புகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. "இது கீழடியில் வாழ்ந்த‌ சமூகம் விவசாயத்திற்காக விலங்குகளைப் பயன்படுத்தி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது" என்று உதயசந்திரன் கூறியுள்ளார்.

தொல்லியல் துறையின் அறிக்கையில் அக்காலகட்டத்தில் நெசவுத் தொழில் பல்வேறு நிலைகளில் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்தது என்றும் 'சிறந்த களிமண்ணால் போடப்பட்ட தரைகள்', 'மழை நீர் வடிகாலுக்காக வரித்தடம்‌ பதிக்கப்பட்ட கூரை ஓடுகள்', 'இரும்பு ஆணிகளால்' இறுக்கப்பட்ட இணைப்புகள் மற்றும் தந்தத்தால் செய்யப்பட்ட 110 அச்சுகள் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

பானை ஓடுகளில் உள்ள தாதுக்களைச் சோதனையிட்ட போது தண்ணீர் பாத்திரங்களும் உணவுப் பாத்திரங்களும் அங்கேயே கிடைக்கும்‌ மூலப் பொருட்களால் செய்யப்பட்டவை என்பது தெரியவந்தது. சிந்துவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்களோடு கீழடியில் கிடைத்த எழுத்துருக்கள் தொடர்புடையவை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொயு 580ம் ஆண்டைச் சேர்ந்த குறியீட்டுப் படங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துருவிற்கும் தமிழ் பிராமி எழுத்துக்களுக்கும் இடையிலான தொடர்பைக் காட்டுவதாக உள்ளது என்று எண்ணப்படுகிறது.

கீழடி நாகரிகம் அகழாய்வில் கண்டறியப்பட்டதிலிருந்து திராவிட மற்றும் இடதுசாரி கருத்தியலாளர்கள் சிந்து சமவெளி நாகரிகம் திராவிடக் கலாச்சாரத்தைப் பின்பற்றிய சுதந்திரமான மதச்சார்பற்ற தமிழ் நாகரிகம் என்று அகழாய்வில் கண்டறியப்பட்ட தரவுகளின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளதாக கூறிவருகின்றனர். இந்த தரவுகளை குறுகிய இனவாத சொற் கூறுகளைக் கொண்டு வரை இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தனித்தமிழ் உணர்வுகளை தூண்டுவது. இரண்டு, இந்தியாவை ஒரே நாடாக பார்க்கும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பான்மைக்கு சவால் விடுவது.

எல்லா திசைகளிலும் பல வேறுபட்ட கலாச்சாரங்கள் பாரதத்தின் நிலப்பரப்பில் பரவியிருக்கின்றன. அவை அனைத்துமே இந்திய அடையாளத்தை வடிவமைப்பதில் பங்களித்திருக்கின்றன. இல்லாத ஒரு இனவாத அடையாளத்தை இந்திய கலாச்சாரத்தின் மீது திணிப்பது மலிவான அரசியலே அன்றி வேறெதுவும் இல்லை.

Similar News