59 நிமிடங்களில் கடன் உதவி: ₹328 கோடி மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல்

59 நிமிடங்களில் கடன் உதவி: ₹328 கோடி மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல்

Update: 2018-11-10 19:16 GMT
பிரதமர் திரு நரேந்திர மோடி, இம்மாதம் 2 ஆம் தேதியன்று, பொதுத்துறை வங்கிகள் 59 நிமிடங்களில் கடன் உதவிக்கு ஒப்புதல் அளிக்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியன் வங்கி இதுவரை ₹328.04 கோடி மதிப்புள்ள 602 கடன்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான  திருமதி. பத்மஜா சுந்துரு தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த அரையாண்டுக் காலத்தில் பிரதமர் முத்ரா திட்டத்தின்கீழ், ₹821 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.  அடல் ஓய்வூதிய திட்ட இயக்கத்தில் சிறப்பாக செயலாற்றியுள்ள இந்தியன் வங்கி இதில் முதல் இடத்தில் உள்ளது.  நலிந்த பிரிவினருக்கு, ₹15833 கோடி கடன் உதவி அளித்துள்ள இந்தியன் வங்கி முன்னுரிமைத் துறைக்கு ₹64822 நிதியுதவி செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் இந்தியன் வங்கியின் வைப்புத் தொகை முந்தைய ஆண்டைவிட 10.5 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.  மொத்த வர்த்தகம், கடந்த ஆண்டைவிட 14.28 விழுக்காடு  அதிகரித்து ₹391844 கோடியை எட்டியுள்ளது.
சென்ற அரையாண்டுக் காலத்தில் வட்டி வருவாய் 13.23 விழுக்காடும்,  நிகர வட்டி வருவாய் 17.81 விழுக்காடும் அதிகரித்துள்ளது.  வங்கியின் நிகர லாபம் 56.37 விழுக்காடு குறைந்துள்ளது. வாராக் கடன்களைப் பொறுத்தவரை,  மொத்த வாராக் கடன் விகிதம்  7.16 மற்றும் நிகர வாராக் கடன் விகிதம் 4.23-ஆக உள்ளது.  இவை கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.
மொபைல் வங்கி பரிவர்த்தனைகள்  78 விழுக்காடும், இணைய வங்கி பரிவர்த்தனைகள் 8.17 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
இவ்வாறு திருமதி பத்மஜா சுந்துரு தெரிவித்தார்.
Source : PIB

Similar News