அ.தி.மு.க-வுடன் கூட்டணி உறுதி செய்த பியூஷ் கோயல் விஜயகாந்தை சந்தித்தார்

அ.தி.மு.க-வுடன் கூட்டணி உறுதி செய்த பியூஷ் கோயல் விஜயகாந்தை சந்தித்தார்

Update: 2019-02-19 17:53 GMT

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அறிவிப்பு வெளியிட்ட பின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று அவருடன் உடல் நலம் விசாரித்தனர்.பின்னர், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து நலம் விசாரித்தார் பியூஷ் கோயல். 


இன்று சென்னையில், கிரவுன் பிளாசா ஹோட்டலில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பா.ஜ.க சார்பில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். 


அதற்கு முன்னதாக அ.தி.மு.க - பா.ம.க. இடையே கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், பின்னர் அதிமுக பாஜக இடையே கூட்டணியில் பேச்சுவார்த்தை 3 மணிக்கே நிறைவு பெற்று பா.ஜ.க-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது வரை வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ம.க மற்றும் பா.ஜ.க இணைந்து கூட்டணியை துவங்கியுள்ள நிலையில் தே.மு.தி.க எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு  அமெரிக்காவில் இருந்து சிகிச்சை பெற்று நலமுடன் நாடு திரும்பி உள்ள விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளனர் மத்திய அமைச்சர்கள். இதன் மூலம் தே.மு.தி.க, அ.தி.மு.க – பா.ஜ.க உடன் கூட்டணி வைக்கும் நிலை உருவாகும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


விஜயகாந்த் உடனான அமைச்சர்களின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என ஆழ்ந்த யோசனையில் மூழ்கி உள்ளனர்.


Similar News