அயோத்தி ராமர் கோவில் : "திரும்பி வருவேன்..கோவில் பணி தொடங்கும்‌ போது" - 1991ல் அளித்த வாக்கைக் காப்பாற்றும் மோடி!

அயோத்தி ராமர் கோவில் : "திரும்பி வருவேன்..கோவில் பணி தொடங்கும்‌ போது" - 1991ல் அளித்த வாக்கைக் காப்பாற்றும் மோடி!

Update: 2020-08-05 03:38 GMT

அயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ராம ஜென்ம பூமி இயக்கத்தை நினைவுகூரும்‌ விதமாக 90'களில் நடந்த ராம ஜென்ம பூமி இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் அதில் கலந்து கொண்ட தலைவர்கள் பற்றியும் பலரும் பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கடந்த 1991ஆம் ஆண்டு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் அயோத்தி ராம ஜென்ம பூமிக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ராம ஜென்ம பூமிக்கு அருகில் ஸ்டூடியோ நடத்திவந்த மகேந்திர திரிபாதி என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்த இவர், "பிரதமர் நரேந்திர மோடி 1991ல் மூத்த தலைவர்முரளி மனோகர் ஜோஷியுடன் இங்கு (ராம ஜென்மபூமி) வந்திருந்தார். அப்போது அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத்துக்காக பணி செய்து வந்த ஒரே புகைப்படக் கலைஞர் நான் தான். எனவே அப்போது அவர்கள் இருவரையும் புகைப்படம் எடுக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது" என்று கூறியுள்ளார்.

அப்போது அங்கு சில உள்ளூர் பத்திரிகையாளர்களும் இருந்த நிலையில் முரளி மனோகர் ஜோஷி, நரேந்திர மோடியை குஜராத்தில் இருந்து வந்திருக்கும் பா.ஜ.க தலைவர் என்று அறிமுகப்படுத்தியதாக திரிபாதி கூறியுள்ளார். பத்திரிகையாளர்கள் மோடியிடம் நீங்கள் எப்போது அயோத்திக்கு திரும்ப வருவீர்கள் என்று கேட்டபோது, "ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் போது நான் திரும்ப வருவேன்" என்று அவர் உறுதி அளித்ததாகவும் தற்போது தனது வார்த்தையைக் காப்பாற்றி விட்டதாகவும் திரிபாதி பெருமிதத்துடன் கூறுகிறார்.

ஆகஸ்ட் 5 அன்று நடக்கும் பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாத்வி ரிதாம்பரா மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். 40கிலோ எடையுள்ள 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட வெள்ளி செங்கல் அடிக்கல் நாட்ட பயன்படுத்தப்பட உள்ளது. 

Similar News