கோவிலில் இருந்த சிலையை எடுத்து கிணற்றில் வீசியதால் பரபரப்பு: காவல்துறை விசாரணை!

இந்த கோவிலில் இருந்த 1 அடி உயரமுள்ள அனுமன் சிலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருப்பதாக கோயில் நிர்வாகி சரவணன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

Update: 2021-02-20 11:42 GMT
அரியலூர் மாவட்டத்தில் கோவிலில் இருந்து காணாமல் போன 1 அடி உயரமுள்ள அனுமன் சிலை கோவில் அருகே இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் என்னும் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. பழமையான இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த கோவிலில் இருந்த 1 அடி உயரமுள்ள அனுமன் சிலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருப்பதாக கோயில் நிர்வாகி சரவணன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று கோவிலில் இருந்த கிணற்றில் சிலையை தேடும் பணியினை காவல்துறையினர் மேற்கொண்டனர். அப்பொழுது கிணற்றில் இருந்த தண்ணியை அப்புறப்படுத்தி உள்ளே இறங்கி பார்த்தபோது அனுமன் சிலை சேற்றில் சிக்கியிருந்ததை கண்டனர். பின்னர் சிலையை கிணற்றிலிருந்து எடுத்து சிலைக்கு அபிஷேகம் செய்து அருகிலிருந்த மாரியம்மன் கோவிலில் சிலையை பத்திரப்படுத்தி வைத்தனர்.
கோவிலில் இருந்த சிலையை எடுத்து கிணற்றில் எதற்காக வீசினர், கோவில் சிலையை திருட முயன்ற போது அப்பகுதியில் யாரேனும் நடமாட்டத்தை கண்டு கோவில் அருகே உள்ள கிணற்றில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காணாமல் போன சிலையை இரண்டு நாட்களுக்குள் மீட்டுக்கொடுத்த காவல்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.

Similar News