சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை!
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை!
சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.
மன்மோகன் சிங் தலைமையில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது. இந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா காங்கிரஸ் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் அரசு நிலத்தை தனது நிறுவனத்துக்கு வாங்கி ராபர்ட் வதேரா அதிக விலைக்கு விற்றதாக முதலில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பிறகு அவர் ராணுவம், பெட்ரோலியம், நிலக்கரி உள்பட பல்வேறு அமைச்சகங்களில் ஒப்பந்தம் பெற்றுக் கொடுக்க பெரிய அளவில் லஞ்சம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மேலும் அவர் லஞ்சப் பணத்தில் வெளிநாடுகளில் குறிப்பாக லண்டனில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சமீபத்தில் இந்த விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சார்பில் ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராக மறுத்து வந்தார்.இதையடுத்து அமலாக்கத்துறை அவரை கைது செய்யும் என்று தகவல் வெளியானது. உடனடியாக ராபர்ட் வதேரா டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு செய்தார். கடந்த 2-ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த டெல்லி கோர்ட்டு பிப்ரவரி 16-ம் தேதி வரை ராபர்ட் வதேராவை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.
அதே சமயத்தில் அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை தவிர வேறுவழியில்லை என்ற நிலை அவருக்கு ஏற்பட்டது. புதன் பிற்பகல் 3.47 மணிக்கு டெல்லி ஜாம் நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். கடந்த மாதம் 23-ஆம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா தனது வெள்ளை நிற டொயட்டோ காரில் ராபர்ட் வதேராவை அழைத்து வந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் விட்டு சென்றார். இதுபற்றி அவர் கூறுகையில்: "ராபர்ட் வதேரா எனது கணவர். அவர்தான் என் குடும்பம். அவருக்கு ஆதரவாக நான் இருப்பேன்" என்றார். இதற்கிடையே அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு சென்ற ராபர்ட் வதேராவை அமலாக்கத்துறை இணை இயக்குனர் மற்றும் இரண்டு உதவி இயக்குனர்கள் தலைமையிலான குழு ஒன்று விசாரிக்க தொடங்கியது. ராபர்ட் வதேராவிடம் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் ராபர்ட் வதேரா தன் கைப்பட எழுத்துப்பூர்வமாக பதில் எழுதி தரும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் விசாரணை சுமார் 6 மணி நேரம் நீடித்தது. ராபர்ட் வதேராவிடம் அதிகாரிகள் லண்டனில் உள்ள 9 சொத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.இதில் 2 சொத்துக்களின் மதிப்பு ₹85 கோடியாகும். மற்ற 7 சொத்துக்களின் மதிப்பு தெரியவில்லை. ஆனால் ராபர்ட் வதேரா தனக்கு லண்டனில் எந்த சொத்தும் இல்லை என்று மறுத்தார். இதுபற்றி அவர் விரிவாக எழுதி கொடுத்துள்ளார். ஆயுத புரோக்கர் சஞ்சய் பண்டாரி பற்றி தெரியுமா? என்றும் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கும் அவர் தெரியாது என்றே பதில் அளித்தார்.