பொது தகவல் தொடர்பு அலுவலகம் வடகொரியாவால் தகர்ப்பு! தயார் நிலையில் ராணுவம்: பூதகரமாக வெடித்தது வடகொரியா - தென்கொரியா பிரச்சனை!

பொது தகவல் தொடர்பு அலுவலகம் வடகொரியாவால் தகர்ப்பு! தயார் நிலையில் ராணுவம்: பூதகரமாக வெடித்தது வடகொரியா - தென்கொரியா பிரச்சனை!

Update: 2020-06-16 08:59 GMT

வடகொரியாவிற்கும், தென்கொரியவுக்கும் இடையான எல்லையில் அமைந்துள்ள கேசாங் நகரில் உள்ள இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தென் கொரிய மற்றும் வட கொரிய எல்லையில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய தங்களது ராணுவம் தயாராக இருப்பதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையிலேயே இச்சம்பவம்  நிகழ்ந்துள்ளது.

வட கொரியாவிலிருந்து தப்பித்து தென்கொரியா சென்றவர்கள் தென் கொரிய எல்லையிலிருந்து, வட கொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசுவதையும், பிரசார வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்களை அனுப்புவதையும் கண்டிக்கும் விதமாக இந்த எச்சரிக்கை அமைந்துள்ளது.

ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழையத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

அதோடு மட்டுமல்லாது கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இதனை தொடர்ந்தே தற்போதைய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட கொரியாவின் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்காவுடன் இணைந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தென் கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Similar News