திருப்பதி கோவில்: தெப்ப உற்சவம் பங்கேற்ற பல்லாயிரக் கணக்கான பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோயில், தெப்ப உற்சவத்தின் 3-ம் நாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தெப்ப உற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். திருப்பதியில் ஆண்டு தோறும் 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. தற்போது, கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், வருடாந்திர தெப்ப உற்சவம் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் சீதாராமன், லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமி கோதண்டராமருடன் மூன்று சுற்றுகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்தார்கள்.
இதேபோல் அடுத்த 2 நாளில் ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் சுவாமி மூன்று சுற்றுகள் வலம் வந்து தெப்பத்தில் எழுந்தருளினர். நேற்று மூன்றாம் நாளாகிய திருவிழாவில் மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக, மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக கோவில் திருக்குளம் புஷ்கரணியை அடைந்தார். தொடர்ந்து, தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு தீபாராதனை நடைபெற்றது.
அப்பொழுது நான்கு புறங்களில் அமையப்பெற்ற தெப்பத்தில் சுற்றி நின்ற பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கடவுளைப் பிரார்த்தனை செய்தனர். ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கானோர் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். தெப்ப உற்சவத்தையொட்டி, ஏழுமலையான் கோவிலில் தினசரி நடைபெறும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Thanthi News