எதையும் செய்வேன் ! ஆனால் டெல்லி உத்தரவு எனக்கு ரொம்பவும் முக்கியம் !! ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடம் ஆசி பெற வந்த எடியூரப்பா பேட்டி!!

எதையும் செய்வேன் ! ஆனால் டெல்லி உத்தரவு எனக்கு ரொம்பவும் முக்கியம் !! ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடம் ஆசி பெற வந்த எடியூரப்பா பேட்டி!!

Update: 2019-07-24 09:10 GMT

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவது தொடர்பாக டெல்லி மேலிட உத்தரவுக்காகக் காத்திருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார். 


கர்நாடகா சட்டப்பேரவையில் நேற்று (ஜூலை 23) நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இயலாமல் கவிழ்ந்துவிட்டது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால், 105 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவைப் பெற்ற பாஜக அங்கு ஆட்சி அமைப்பது உறுதியானது.


இந்நிலையில், சம்ராஜ்பேட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வருகை தந்த எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசும்போது, "சங்க பரிவாரத்தின் மூத்த தலைவர்களிடம் நல்லாசி பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன்.


ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரவேண்டும். டெல்லி மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறேன். உத்தரவு எந்த நேரத்திலும் வரலாம். உத்தரவைப் பெற்றவுடன் பாஜக சட்டமன்ற குழு கூட்டத்தைக் கூட்டுவோம். பின்னர், ராஜ்பவன் சென்று ஆளுநரை சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோருவோம்" என்றார்.


முன்னதாக, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடனேயே பேட்டியளித்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, "நிச்சயமாக கர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரும். ஆனால், டெல்லியில்பாஜக மூத்த தலைவர்களிடமிருந்து உத்தரவு பெறப்பட்ட பின்னரே அது நடக்கும்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News