சரஸ்வதியின் கொலைக்கு விடுதலை சிறுத்தைகள் பொறுப்பேற்க முடியாது - வலிய வந்து மறுப்பு தெரிவிக்கும் திருமாவளவன்!

Update: 2021-04-22 06:30 GMT

"சரஸ்வதியின் கொலைக்கு காரணமாக காதல் இருக்கலாம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காரணமாக இருக்க முடியாது" என வலிய வந்து கருத்து தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அரக்கோணத்தில் சோகனூர் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் புகார் எதுவும் பெறாமல் சௌந்தரராஜன் கொடுத்த வாக்குமூலத்தை மட்டுமே புகாராக கொண்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சரஸ்வதி என்ற இளம்பெண் காதலின் பெயரால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அந்தக் கொலையையும் சொந்த சமூகத்தைச் சார்ந்த பெண்ணின் இழப்பையும் தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறார் ராமதாஸ். அருவருப்பான அநாகரிகமான அரசியலை ராமதாஸ் கையில் எடுக்கிறார்" என்றார்.

மேலும் பேசிய அவர், "சரஸ்வதியின் கொலைக்கு காரணமாக காதல் இருக்கலாம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை குறிவைத்து மறைமுகமாக தொடர்ந்து தாக்குவதும் அவதூறு பரப்பும் சமூக வலைதளங்களில் அதற்கான பிரசார களமாக பயன்படுத்துவது நீடித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடக்கும் காதல் திருமணங்களுக்கு எல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட நபர் எப்படி பொறுப்பாக முடியும்? அவர் வேண்டுமென்றே தலித் மற்றும் தலித் அல்லாதவர்களின் அரசியலை சாதி அடிப்படையில் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்றும் தற்குறித்தனத்தோடு அவதூறுகளைப் பரப்புகிறார்.

விடுதலை சிறுத்தைகள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை பொருக்க முடியாது" என கூறினார்.

Similar News