"சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை" என எடப்பாடியாரிடம் பாசம் காட்டிய ஸ்டாலின்!

Update: 2021-05-03 08:26 GMT

"சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை" என எடப்பாடி பழனிச்சாமி'யிடம் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் உருகியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6'ஆம் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. அதில் ஆரம்பம் முதல் இருந்தே தி.மு.க கூட்டணி முன்னணியில் இருந்து வந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இறுதியில் சுமார் 159 தொகுதிகளை கைப்பற்றி தி.மு.க கூட்டணி தேர்தலில் வெற்றி கண்டுள்ளது.

இதனை தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்க உள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக் கூறியுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின், "மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.



பரஸ்பரம் இவ்வாறு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டது தொண்டர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News