தமிழகத்தில் உயரும் மதுபான விலை? அறிவிப்பு விரைவில்!

Update: 2021-06-10 15:00 GMT

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் சில இடங்களில் மதுபானக்கடை திறக்கப்படவுள்ளதாகவும் மதுபாட்டில்கள் விலை உயரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 14'ம் தேதி காலையுடன் முடிவுக்குவரும் நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து இன்று முதல்வர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி திரிபாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் மேலும் பல தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு அனுமதியளிக்கப்படலாம், டாஸ்மாக் உட்பட அனைத்துக் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதியளிக்கப்படும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து டோக்கன் முறையில் டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கொரோனாவால் பலத்த பொருளாதார நெருக்கடியில் தமிழக அரசு சிக்கித்தவிப்பதால் கடந்த ஆண்டைப்போலவே மதுபானங்களின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது.

Similar News