தடுப்பூசிக்கு அலைய விட்டுட்டு ஒன்றிய அரசுன்னு பெயர் வச்சு விளையாடுறீங்களா? - விளாசும் ஆர்.பி.உதயகுமார்!

Update: 2021-06-11 06:15 GMT

"மக்கள் தடுப்பூசிக்கு அலைந்து வரும் சூழலில் மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, ஒன்றிய அரசா அல்லது மத்திய அரசா என பெயர் சூட்டு விழா நடத்துவது கவலை அளிக்கிறது" என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கொரோனா தடுப்பூசிக்கும் கருப்பு பூஞ்சை மருந்துக்கும் தட்டுப்பாடு என பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மக்கள் உயிர் காக்கும் விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுகிற வழியும் தடுப்பூசி பெறுவதிலும் மக்களின் நலனை முன்னிறுத்திதான் அரசின் அணுகுமுறை அமைய வேண்டும். இந்த நேரத்தில் அரசின் அணுகுமுறை மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தடுப்பூசிக்கு அலைந்து வரும் சூழலில் மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, ஒன்றிய அரசா அல்லது மத்திய அரசா என பெயர் சூட்டு விழாவில் கவனம் செலுத்துவது கவலை அளிக்கிறது.

இது மத்திய அரசுக்கு பெயர் சூட்டும் நேரம் அல்ல. மக்களின் உயிர் பிரச்னையில் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். அரசு எடுக்கிற நடவடிக்கை எல்லாம் மக்களின் நலனை முன்னிறுத்திதான் நடைபெற வேண்டும். தவிர வெற்று விளம்பரத்தில் எதுவும் அமையக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. உயிர் பலியைத் தவிர்த்து மத்திய அரசிடம் தடுப்பூசியை பெறுவதில் வெற்றி பெற வேண்டுமே தவிர மத்திய அரசை குற்றம் சொல்லியோ குறை சொல்லியோ பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது" என தெரிவித்தார்.

Similar News