அப்போ டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தி.மு.க போராடிவிட்டு, இப்போது டாஸ்மாக் கடைகளை திறக்க முயல்வது என்ன நியாயம்?

Update: 2021-06-12 01:00 GMT

கொரோனா தொற்று 2-வது அலை தமிழகத்தில் அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.

இந்நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.




 


இதுபற்றி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், கடந்த ஆண்டு நோய்த்தொற்றின்போது டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என திமுக போராடிவிட்டு இப்போது டாஸ்மாக் கடைகளை திறக்க முயல்வது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். மதுக்கடைகள் திறப்பதை பெண்கள் எதிர்ப்பதை தமிழக முதல்வர் உணரவேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். 

Similar News