'முதலமைச்சர் என்பதற்கு பதிலாக, ஆலோசனைக்குழு தலைவர் என்றும் ஸ்டாலினை அழைக்கலாம்' : அர்ஜூன் சம்பத் அதிரடி!
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக வின் அமைச்சர்கள் பலர் மத்திய அரசை "ஒன்றிய அரசு" என்று புதிதாக அழைத்து வருகின்றனர். இது குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது முதலமைச்சர் "ஒன்றிய அரசு என்று சட்டத்தில் இடம்பெற்று இருப்பதாகவும், இனிமேல் அப்படி தான் பயன்படுத்துவோம்" என்று தீர்க்கமாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் "முதலமைச்சர் என்பதற்கு பதிலாக, ஆலோசனைக்குழு தலைவர் என்றும் ஸ்டாலினை அழைக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சமீப காலமாக மத்தியிலுள்ள பா.ஜ.க அரசை 'மத்திய அரசு' என்று குறிப்பிடுவதை தவிர்த்து 'ஒன்றிய அரசு' என்று தமிழக முதலமைச்சர் , தி.மு.க அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அதே போல் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பின்போதும் சில சேல்களை தவிர, பெரும்பாலான தி.மு.க வை ஆதரிக்கும் சேல்கள் 'ஒன்றிய அரசு' என்றே குறிப்பிடுகின்றன.
அதே போல், ஸ்டாலினை முதலமைச்சர் என்று தான் அழைக்க வேண்டும் என்பது சட்டம் அல்ல; அவரை ஆலோசனைக் குழு தலைவர் என்றும் அழைக்கலாம். அவர் ஆளுநருக்கு ஆலோசனை சொல்லும் குழுவின் தலைவர் தான், இறுதி முடிவு ஆளுநரிடம் தான் உள்ளது. இதை நான் சொல்லவில்லை; இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு - 163 சொல்கிறது. அதனால், இனிமேல் சட்டப்படி 'ஆலோசனைக்குழு தலைவர் ஸ்டாலின் அவர்களே' என அழைக்கலாம். 'ஒன்றிய அரசு' சரி என்று ஏற்றுக்கொள்பவர்கள், இதையும் ஏற்க வேண்டும்." என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த போது மத்தியில் உள்ள பா.ஜ.க ஆட்சியை "மத்திய அரசு" என்று தான் அழைத்து என்பது குறிப்பிடதக்கது.