கோவிந்தராஜ் மரண விவகாரத்தில் காவல்துறைக்கு தி.மு.க எம்.பி அழுத்தம் - பா.ம.க பாலு குற்றச்சாட்டு !
"தி.மு.க எம்.பி ரமேஷ் தலையீடு இருப்பதால் முந்திரி தொழிற்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்த கோவிந்தராசின் வழக்கை காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை" என பா.ம.க வழக்கறிஞர் பாலு குற்றம் சுமத்தியுள்ளார்.
கடலூர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர்.வி.எஸ் ரமேஷிற்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடலூர் மாவட்டம் பண்ரூட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 20 ஆம் தேதி முந்திரி தோப்பில் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து முந்திரி தொழிற்சாலையின் உரிமையாளர் ரமேஷ், உதவியாளர் நடராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கோவிந்தராசின் மகன் செந்தில்வேல், பா.ம.க வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாலு உள்ளிட்டோர் டி.ஜி.பி அலுவலகத்தில் டி.ஜி.பி சைலேந்திர பாபு'வை நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க வழக்கறிஞர் பாலு, "முந்திரி தொழிற்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்த கோவிந்தராசின் வழக்கானது தி.மு.க எம்.பி ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் கிடப்பில் இருப்பதாகவும், தி.மு.க எம்.பி'யின் தலையீட்டு இருப்பதால் காவல் துறையினர் முறையான விசாரணை நடத்தவில்லை" எனவும் குற்றஞ்சாட்டினார்.