தி.மு.க அரசு பாலியல் வழக்குகளில் தாமதம் காட்டாமல் விரைந்து முடிக்க வேண்டும் - மரு.ராமதாஸ்

Update: 2022-01-19 17:15 GMT

பண்ரூட்டியில் கல்லூரி தாளாளர் டேவிட் அசோக்குமார் உட்பட மூவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் தி.மு.க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



தமிழகத்தில் பாலியல் விவகாரத்தில் பெண்கள் பாதிப்புக்குள்ளாவது தற்காலத்தில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக படிக்கும் மாணவிகள் அதிகளவில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் பண்ருட்டியில் ஜே.என்.எஃப் செவிலியர் கல்லூரியில் படித்த மாணவியை கல்லூரி தாளாளரே பாலியல் வன்புனர்வுக்கு ஆளாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "பண்ருட்டி ஜெ.என்.எஃப் செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவியை அதன் தாளாளர் டேவிட் அசோக்குமார் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதை காணொலியில் பதிவு செய்து, அதைக் காட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர், அதைத் தாங்கிக்கொள்ள முடியாத விழுப்புரம் மாவட்டம் ஆனைக்கவுண்டன் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, பண்ருட்டி மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மாணவி கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர், அதற்கு துணையாக இருந்த கல்லூரி பெண் பொறுப்பாளர் உள்ளிட்ட நால்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பிவிடக்கூடிய ஆபத்து உள்ளது, அதேபோல் திண்டுக்கல் முத்தனம்பட்டி தனியார் செவிலியர் கல்லூரியில் மாணவிகள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதன் தாளாளர் ஜோதிமுருகன் 10 நாட்களில் பிணையில் வெளிவந்து விட்டார். இந்த வழக்கின் குற்றவாளிகளும் அதேபோல் தப்பிவிடக்கூடாது.

மாணவி பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். கைது செய்யப்பட்ட நால்வரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தரமான மருத்துவம் அளிக்க வேண்டும். அவர் அரசு செவிலியர் கல்லூரியில் படிப்பை தொடர வகை செய்வதுடன், அரசு வேலைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மாணவிக்கு நிவாரண உதவியாக அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்" என தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Source - Dr.Ramadoss Tweet

Similar News