"மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் காரணமாக இருக்க முடியாது" - மதமாற்று பிரச்சாரத்திற்கு திருமாவளவன் ஆதரவா?
மதமாற்ற கொடுமையால் சிறுமி இறந்த விவகாரத்தில் பா.ஜ.க களமிறங்கியுள்ளதற்கு எதிராக கிருஸ்துவ பள்ளிக்கு ஆதரவாக வி.சி.க திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
தஞ்சையை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை அவர் படிக்கும் மைக்கேல்பட்டி தூய இருத மேல்நிலைப் பள்ளி எனப்படும் கிருஸ்துவ பள்ளி மதம் மாற சொல்லி கொடுமைபடுத்தியதாக தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இதற்கு நீதி கேட்கும் வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை முதலில் குரல் எழுப்பினார். பின்மர் அவருக்கு ஆதரவாக பா.ஜ.க'வினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் குதித்தனர். நேற்று தஞ்சையில் மற்றும் சென்னையில் பா.ஜ.க'வின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தி.மு.க அரசின் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இப்படி இறந்த சிறுமிக்கு நியாயம் வேண்டி பா.ஜ.க'வினர் போராடுகையில் கிருஸ்துவ பள்ளிக்கு ஆதரவாக திருமாவளவன் அறிக்கை அளித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள தூய இருதயமேரி பள்ளியில் பயின்று வந்த மாணவி லாவண்யா அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மாணவி லாவண்யாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் சுண்டிக்கிறோம். மாணவி லாவண்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் தமிழக அரசு, தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரின்மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், அம்மாணவியின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
மாணவி லாவண்யாவின் சாவுக்குக் காரணம் அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்தது தான் என்ற பொய்யானதொரு குற்றச்சாட்டைப் பரப்பி, பா.ஜ.க உள்ளிட்ட சனாதன சக்திகள் மேற்கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய வெறுப்புப் பிரச்சாரத்தைத் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்" என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.