முதல்வரின் விளம்பர நாடகத்திற்கு ஏழை மக்கள் ஏன் அலைய வேண்டும்? - தமிழக பா.ஜ.க தலைவர் கண்டனம்!
முதல்வரின் விளம்பர நாடகத்திற்காக மக்கள் ஏன் வீணாக அலைய வேண்டும்? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூகவலைத்தளங்களில் கூறும் போது, "இன்று மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ரோட் ஷோ நிகழவிருப்பதைக் காரணம் காட்டி, உடுமலைப்பேட்டை நகரப் பேருந்து நிலையத்தையே மாற்றி 1.5 கி.மீ. தொலைவில் ஒரு குப்பை மேட்டில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ள திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகத்தின் பல பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு வெறும் விளம்பர அரசியலுக்காக தெருவில் இறங்கி தரிசனம் காட்டும் முதல்வரின் தேர்தல் உத்திக்காக, வியர்க்க விறுவிறுக்க பேருந்து நிலையத்தைத் தேடி மக்கள் எதற்கு அலைய வேண்டும்? அதுவும் பேருந்து நிலையத்தை மாற்றுகிறோம் என அரசு சார்பில் மக்களுக்கு முறையாகத் தெரியப்படுத்தப்பட்டதா என்று கூடத் தெரியவில்லை. படிக்கும் பிள்ளைகள் முதல் வயதான முதியோர் வரை எத்தனை பேர் பேருந்துக்காக பழைய இடத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்களோ? சொல்லாமல் கொள்ளாமல் சாத்தனூர் அணையைத் திறந்துவிட்டு மொத்த ஊரையும் வெள்ளத்தில் மிதக்கவிட்ட இந்த அலங்கோல அரசு எதைத்தான் ஒழுங்காகச் செய்துள்ளது?
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் பள்ளி மாணவர்களை மொட்டை வெயிலில் காய விடுவது, ரோட் ஷோ என்ற பெயரில் பொதுமக்களைப் பாடாய்ப்படுத்துவது என தங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக தொடர்ந்து மக்கள் நலனைக் கிள்ளுக்கீரையாக பிய்த்து எறிந்து வரும் இந்த அராஜக திராவிட மாடல் ஆட்சியை மக்கள் தூக்கியெறியும் நாள் வெகு தூரமில்லை" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.