வெளியில் சொல்ல முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா! அ.ம.மு.க-வுக்காகப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை!

Update: 2021-03-03 02:49 GMT

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இரு அணிகளாகப் பிளவு, அ.ம.மு.க என்ற புதிய கட்சி துவக்கம் என அ.தி.மு.க பல சோதனைகளைச் சந்தித்தது. இருப்பினும் சாதூா்யமான நடவடிக்கைகளால் பிரிந்து சென்றவா்களை இணைத்து, ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்து அடுத்த தேர்தலுக்கு தயாராகிவிட்டது முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு.

சிறையில் இருந்து சசிகலா விடுதலையான பிறகு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தலைகீழ் மாற்றங்கள் நிகழக் கூடும் என்ற கணிப்புகளெல்லாம் பொய்யாகியிருக்கிறது. சசிகலாவைப் பொருத்தவரை, அவா் தொடா்ந்துள்ள வழக்கின் முடிவு தெரியாத வரையில் அடுத்தகட்ட நகா்வை அவரால் மேற்கொள்ள இயலாது.

இந்த சூழ்நிலையில், சசிகலா மீண்டும் இணைவதற்காக அ.தி.மு.க தலைமையுடன் பேச்சுவாா்த்தை நடைபெறுவதாகவும், அதை அ.தி.மு.க தலைமை ஏற்க மறுப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சில தொகுதிகளில் நடந்த இடைதேர்தல்களில் அ.தி.மு.க வின் தோல்விக்கு அ.ம.மு.க பிரித்த வாக்குகளே முக்கியக் காரணம். தற்போது தினகரனுடன் இணைந்து, அ.ம.மு.கவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தால், அ.தி.மு.க மீது உரிமை கொண்டாட முடியாது என்பதால் செய்வதறியாது திகைத்து வருகிறார்.

தற்போது வரை இரட்டை இலை அ.தி.மு.க விடம் உள்ள நிலையில், அ.ம.மு.க வை ஜாதி சாா்புள்ள கட்சியாகத்தான் மக்கள் பாா்க்கிறாா்கள் என்கிற கருத்து பரவலாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், அ.ம.மு.காவுக்காகப் பிரசாரம் மேற்கொள்ள முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா இருக்கிறாா் என்றுதான் கொள்ள வேண்டும்.

Similar News