மாவோயிஸ்டுகள் மற்றும் மதவெறியர்களிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் உளவுத்துறை அறிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவல் காரணமாக அவருக்கு உள்துறை அமைச்சகம் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இது அவருக்கு மாநில காவல்துறை வழங்கிய பாதுகாப்பை விட மேலானது. 'ஒய்' அளவிலான பாதுகாப்பின் கீழ், அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்) மற்றும் மாநில காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு சி.ஐ.டி'யின் ஆயுதமேந்திய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள்.
அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள் மற்றும் மத தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையினர் தகவல் அளித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை புலனாய்வு அமைப்புகள் கவனத்தில் எடுத்து, முறையான ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை தயாரித்தன. இதையடுத்து தலைவருக்கு 'ஒய்' பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு (சி.ஆர்.பி.எஃப்) மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
முன்னதாக பிப்ரவரி மாதம், சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைமை அலுவலகமான 'கமலாலயம்' மீது அக்கட்சியின் நீட் ஆதரவு நிலைப்பாட்டிற்காக மூன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பிப்ரவரி 10'ம் தேதி பெட்ரோலியம் நிரப்பப்பட்ட மூன்று பாட்டில்களுக்கு தீ வைத்து பா.ஜ.க மாநில தலைமையகத்தில் வீசியதற்காக 38 வயது நபரை போலீசார் கைது செய்தனர். அண்ணாமலை பின்னர் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) இந்த சம்பவம் மற்றும் பெரிய சதியை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.