சிவகங்கை மாவட்ட ஊராட்சித்தலைவரை கைப்பற்றிய அதிமுக.. நிர்வாகிகள் உற்சாகம்.!

சிவகங்கை மாவட்ட ஊராட்சித்தலைவரை கைப்பற்றிய அதிமுக.. நிர்வாகிகள் உற்சாகம்.!

Update: 2020-12-11 12:50 GMT

சிவகங்கையில் மொத்த 16 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளது. இதில் அதிமுக 8 இடத்தையும், திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் வென்றன. இதனால் அதிமுக, திமுக இரண்டுமே சம பலத்தில் இருந்தது.

இந்நிலையில், ஜனவரி 11ம் தேதி, ஜன 30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதனை அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்தனர். இதனால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மேலும் 6 மாதங்கள் தேர்தல் தள்ளிபோனது. இதையடுத்து திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர்நீதிமன்றம் மதுரை கிளையை அணுகினர்.
இதையடுத்து டிசம்பர் 4-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், 4 முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் ஆணையருமான மதுசூதனன் ரெட்டி தலைமையில் தேர்தல் நடைபெற்றது.


இந்த தேர்தல் வாக்குப்பதிவில் இருவரும் சம வாக்குகளை பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் முடிவு செய்தார். 

அதன்படி குலுக்கல் முறையில் நடத்தப்பட்ட தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் தலா 8 வாக்குகள் பெற்றதால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த வெற்றியால் அதிமுக நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Similar News