'வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது தமிழக அரசின் தவறான முடிவு' - பா.ஜ.க தலைவர் முருகன்.!

'வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது தமிழக அரசின் தவறான முடிவு' - பா.ஜ.க தலைவர் முருகன்.!

Update: 2020-11-08 19:25 GMT

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் ஞாயிற்றுக்கிழமை அன்று கூறுகையில், தங்களுடைய கூட்டணிக் கட்சியாகிய அ.தி.மு.க அரசு 'வேல் யாத்திரை' நடத்துவதற்கு அனுமதி மறுத்ததன் மூலம் தவறான முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர் இரண்டாவது முறையாக வேல் யாத்திரையை நடத்த சென்றபோது மறுபடியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரை தடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, போலீசார் மறுபடியும் முருகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் .சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் மற்றவர்களை திருவொற்றியூரில் இருந்து யாத்திரை எடுக்க முயற்சி செய்த போது கைது செய்து பக்கத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் தடுத்து வைத்தனர். அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முருகனின் அறுபடை வீடுகளுக்கும் செல்லத் திட்டமிட்டிருந்த  இந்த யாத்திரைக்கு கொரானா வைரஸ் தொற்று காரணமாக அனுமதி மறுத்ததாக அரசு தெரிவித்திருந்தது. 

பா.ஜ.க தலைவர் முருகன் மற்றும் பல தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் வெள்ளிக்கிழமை அன்று  திருத்தணியில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.  "வேல் யாத்திரைக்கு  அனுமதி மறுப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு தவறான முடிவு எடுத்துள்ளது. யாத்திரை முடிவு செய்யப்பட்ட படி தொடரும்" என்று முருகன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

கோவில்கள் இல்லாத வழியாக யாத்திரையை நடத்த முடியுமா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு தமிழ்நாட்டில் கோவில்கள் இல்லாத இடம் இல்லை என்று அவர் பதிலடி கொடுத்தார்.  இப்படி அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ஜ.க மனு தாக்கல் செய்துள்ளதைப் பற்றி குறிப்பிட்ட அவர், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறினார்.

 இரண்டாவது நாள் யாத்திரையை திருவொற்றியூரில் இருந்து துவங்கிய முருகன், மாநில அரசாங்கம் இந்த விவகாரத்தை ஆரம்பத்திலிருந்தே நியாயமான முறையில் கையாளவில்லை என்று கூறினார். திருச்செந்தூரில் அடுத்த மாதம் முடிவடைய உள்ள இந்த யாத்திரை, கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு பின்னணியில் இருக்கும் தி.மு.கவை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும்.  

தமிழ்நாட்டின் 2021 சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க ஒரு பெரும் சக்தியாக வெளிவரும் என்றும் அரசாங்கம் உருவாவதில் ஒரு முக்கிய பங்காற்றும் என்றும் முருகன் தெரிவித்தார். பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை தன் வீட்டிலிருந்து வெளியே செல்லக் கூட தான் மறுக்க பட்டதாக கூறினார். ராகவன் மேலும் கூறுகையில், தாம்பரம், மகாபலிபுரம் மற்றும் சென்னையின் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை யாத்திரையில் பங்கேற்பது தடுக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டினார்.

Similar News