ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிக இடங்களைப் பெற்ற பா.ஜ.க.!

ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிக இடங்களைப் பெற்ற பா.ஜ.க.!

Update: 2020-11-18 06:30 GMT

ஏழாவது முறையாக பீகார் முதல்வராக நிதீஷ் குமார் நேற்று பதவியேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் உயர் தலைவர்கள் முன்னிலையில் அவர் முதல்வராக பதவியேற்றார். 

நிதீஷ் குமார் தவிர, 14 அமைச்சர்களும் அப்போது பதவியேற்றனர். அதில் 7 பேர் பா.ஜ.க வைச் சேர்ந்தவர்கள். 6 பேர் ஐக்கிய ஜனதா தளத்தைச் (JDU) சேர்ந்தவர்கள் ஆவர். புதிய அரசாங்கத்தில் ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா மற்றும் விஐபி கட்சிக்கு தலா ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. நிதீஷ் குமார் மற்றும் இதர அமைச்சர்கள் ஆளுநர் பாகு சவுகானால் ராஜ் பவனில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று, புதிய அமைச்சரவை நவம்பர் 23 முதல் பீகார் சட்டமன்றத்தின் ஐந்து நாள் அமர்வுக்கு ஒப்புதல் அளிக்க பாட்னாவில் கூடியது. 17வது சட்டமன்றத்தின் முதல் அமர்வு மற்றும் 196வது அமர்வின் கூட்டத்தை கூட்டும் சட்டமன்ற விவகாரத்துறையின் முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நவம்பர் 23 முதல் நவம்பர் 27 வரை 'சட்டமன்றக் கூட்டத்தொடர்' நடக்க உள்ளது.

முதல் அமைச்சரவை கூட்டத்தின் போது, முதலமைச்சர் நிதீஷ் குமார் தனது அமைச்சர்களுக்கு இலாகாவையும் அளித்துள்ளார். சட்ட விதிகளின்படி, பீகாரில் முதல்வர் உட்பட அதிகபட்சம் 36 அமைச்சர்கள் இருக்க முடியும்.

சட்டமன்றத்தின் மொத்த பலத்தில் மாநிலத்தில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 15%ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது என்று விதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும் என பீகார் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

Similar News