தி.மு.க பதவியை ராஜினாமா செய்யலாமா என்ற யோசனையில் பொன்முடி - வெடிக்கும் உட்கட்சி பூசல்.!

தி.மு.க பதவியை ராஜினாமா செய்யலாமா என்ற யோசனையில் பொன்முடி - வெடிக்கும் உட்கட்சி பூசல்.!

Update: 2020-12-01 12:57 GMT

தி.மு.க'வின் உட்கட்சி பூசல்களால் சீனியர்கள் அதிகமாக மனவருத்தத்தில் உள்ளனர். ஏற்கனவே வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றோர் சமீப காலங்களில் தி.மு.க'வில் இருந்து விலகி பா.ஜ.க'வில் ஐக்கியமான நிலையில் இன்னும் பல தி.மு.க'வின் சீனியர்கள் தி.மு.க'வின் நடவடிக்கைகள் மற்றும் தி.மு.க'வின் சரியில்லாத தலைமையால் உள்ளம் வெதும்பி சரியான தருணம் பார்த்து வருவதாக சில அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் தி.மு.க'வின் மூத்த உறுப்பினரும், துணை பொதுசெயலாளருமாகிய பொன்முடி தலைமையின் மீதும், கட்சி நடவடிக்கைகளின் மீதும் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. மேலும் கட்சி மீதுள்ள அதிருப்தி காரணமாக எந்த நேரமும் அவர் தனது தி.மு.க பதவியை ராஜினாமா செய்துவிடுவார் எனவும் தகவல்கள் வருகின்றன.

கட்சிப் பணியை சரிவர செய்யாத காரணம் என்று கூறி பொன்முடியின் ஆதரவாளரும், பொன்முடியின் சமூகத்தை சேர்ந்தவருமான துரைராஜ் என்பவரை ஒன்றிய செயலாளர் பதவி யிலிருந்து நீக்க கடந்த 20-ந்தேதி கட்டம் கட்டியது தி.மு.க தலைமை. துரைராஜுக்கு பதிலாக சந்திரசேகரனை நியமித்துவிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இதன் காரணமாக ஏற்கனவே தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த பொன்முடி மேலும் தான் ஒதுக்கப்படுகிறோம் என தெரிந்து மேலும் கடுப்பாகிவிட்டார்.

இதனை தொடர்ந்து பொன்முடி, மாவட்ட செயலாளர் உதயசூரியனை தொடர்புகொண்டு, ஒருமையில் மிரட்ட மாவட்ட செயலாளர் உதயசூரியனோ மிரண்டு போய் "ஐயோ என்னை விட்ருங்க இது தலைமையின் முடிவுதான்" என போட்டு உடைக்க உச்சபட்ச கோபமடைந்துள்ளார் பொன்முடி.

உடனே அடுத்த கட்டமாக அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதிக்கு ஃபோன் போட்டு கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பொன்முடி. ஆர்.எஸ்.பாரதியோ, "எதுவாக இருந்தாலும் தலைவர் (ஸ்டாலின்) கிட்டே பேசுங்க'' என பதிலுக்கு கடுப்படித்திருக்கிறார். 

மேலும் கோபமடைந்த பொன்முடி ஸ்டாலின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு "எனது ஆதரவாளரை கட்டம் கட்டுவதற்கு முன் என்னிடம் கேட்க மாட்டீர்களா? அப்புறம் எதற்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி? நான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன்'' என்றிருக்கிறார். இது பொதுச்செயலாளர் துரைமுருகன் கவனத்திற்குப் போக, அவர் சொன்னபடி, கட்டம் கட்டப்பட்ட துரைராஜை அழைத்துக் கொண்டு அறிவாலயத்துக்கு 23-ந்தேதி போயிருக்கிறார் பொன்முடி.  

அங்கே ஸ்டாலின், துரை முருகன், கே.என்.நேரு, ஆர்.எஸ் .பாரதி எல்லோரும் முன்னிலையில்  பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறார் பொன்முடி. தன்னுடைய முடிவுக்கு எதிராக பொன்முடி நடந்துகொள்வதை ரசிக்காத ஸ்டாலின், "இதை என்ன னுன்னு பேசி முடிவெடுங்க" என கே.என். நேருவிடம் சொல்ல, பொன்முடியின் இயல்பு அறிந்த நேரு, நீங்களே பேசுங்க என ஜகா வாங்க, கடைசியில் ஸ்டாலினே விசாரித்திருக்கிறார். இறுதியில் "துரைராஜுக்கு பதிலா வேறு ஒருவரை நியமிச்சாச்சு. அத மாத்த முடியாது. துரைராஜுக்கு வேற ஒரு பொறுப்பு தர்றோம்" என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் ஸ்டாலின்.

இதனால் இதுவரை இருந்த கோபமெல்லாம் ஒன்று சேர கட்சி மீது மிகுந்த வெறுப்பில் உள்ளாராம் பொன்முடி. ஏற்கனவே சீனியர்களை ஓரம்கட்டி கட்சியை உதயநிதியை மட்டும் முன்னிலை படுத்தும் வேலையை தி.மு.க துவங்கிவிட்டது. இதில் இன்னும் பொன்முடி போல் சீனியர்களை வெளியேற்றினால் அதுவே தி.மு.க'வின் இறுதி அத்தியாயம் ஆகிவிடும் என அறிவாலய சீனியர்கள் புலம்பி வருகின்றனர்.

Similar News