"தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி சந்தேகம்தான்" - ஹெச்.ராஜாவின் கணிப்பு!

"தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி சந்தேகம்தான்" - ஹெச்.ராஜாவின் கணிப்பு!

Update: 2021-02-10 12:57 GMT

"தி.மு.க காங்கிரஸ் கூட்டணி சந்தேகம் தான்" என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கணித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கேட்கும் இடங்களை தி.மு.க கொடுக்க மறுத்துவருவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன, எனவே, காங்கிரஸ், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், ஓவைசி ஆகிய கட்சிகள் சேர்ந்து கூட்டணி சேரலாம். விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நடைபெறும்" என்றார்.

மேலும் தி.மு.க'வை விமர்சித்து பேசிய அவர் கூறியதாவது, "கடந்த 50 ஆண்டுகாலங்களில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உருவான மருத்துவர்கள், பொறியாளர்கள் என பலருக்கும் அடிப்படைத் தமிழே தெரியாது. திராவிட இயக்கங்கள்தான் இப்படித் தமிழை அழித்தன. தி.மு.க தலைவர்களுடைய வாரிசுகள் நடத்தும் பள்ளிகள் எதிலும் தமிழுக்கு இடமே இல்லை.

தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கையையும் தன் வீட்டுக்கு மும்மொழிக் கொள்கையையும் அவர்கள் பின்பற்றுகிறார்கள். எம்மதமும் சம்மதம் என்று சொல்வது சரியானது என்றால், எம்மொழியும் எம்மொழி என்று சொல்வது எப்படித் தவறாகும்? தமிழகத்தில் தமிழை வளர்க்க நினைக்கும் ஒரே கட்சி பா.ஜ.க மட்டுமே. ஆண்டாளை இழிவாகப் பேசிய வைரமுத்துவைக் கைது செய்யவில்லை. முகமது நபிகள் குறித்துப் பேசியதாக பாஜக நிர்வாகி கல்யாணராமனைக் கைது செய்தது பாரபட்சமான நடவடிக்கையாகும்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Similar News