ராஜீவ் காந்தி கொலையாளிகளை ஹீரோக்கள் ஆக்கக்கூடாது - கார்த்தி சிதம்பரம் பளீச்!

ராஜீவ் காந்தி கொலையாளிகளை ஹீரோக்கள் ஆக்கக்கூடாது - கார்த்தி சிதம்பரம் பளீச்!

Update: 2020-11-25 07:36 GMT
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், உடல்நலக்குறைவு காரணமாக பரோலில் வெளியே வந்துள்ளார். ஆயுள் தண்டனை கைதியான இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி பரோல் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம், இந்த பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் திரை நட்சத்திரங்கள் துவங்கி பிரிவினைவாத அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நாட்டின் பிரதமரையே படுகொலை செய்து தண்டனையை அனுபவித்து வரும் ஒரு குற்றவாளியை தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, எந்த வகையான நியாயம் என்ற கேள்வியும் விமர்சனமும் எழுந்து வருகிறது. பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது என்றும் அவர்களை குற்றவாளிகள் என்று கருத வேண்டுமே தவிர தமிழர்கள் என அழைக்கக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக ஆளுநரை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் சந்தித்து ஏழு பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைத்தார். அதனை அடுத்து நேற்று ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், "ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில்  குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை சட்டரீதியாக விடுதலை செய்ய முடியுமென்றால் விடுதலை செய்யலாம். ஆனால் அவர்களை ஹீரோக்களாக ஆக்ககூடாது. அதே வேளையில் ராஜீவ் காந்தி அவர்களுடன் இறந்து போனவர்களையும் நினைவு கூற வேண்டும். வக்காலத்து வாங்குபவர்கள் கொலை செய்யப்பட்ட தர்மன், சாந்தணிபேகம், ராஜகுரு, சந்திரா, எட்வர்ட் ஜோசப், முகமது  இக்பால், லதா கண்ணன், டரில் ஜூட்பீட்டர்ஸ், கோகிலவாணி, முனுசாமி, சரோஜா தேவி, பிரதீப் இவர்களது குடும்பத்தினருக்கும் என்றைக்காவது குரல் கொடுத்திருக்கிறார்களா?" என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.

Similar News