பொதுமக்களுக்கு இடையூறு.. இரவு 9.30 மணிக்கு சசிகலா விடுதலை.. ஏற்பாடுகளை செய்யும் கர்நாடக அரசு.!

பொதுமக்களுக்கு இடையூறு.. இரவு 9.30 மணிக்கு சசிகலா விடுதலை.. ஏற்பாடுகளை செய்யும் கர்நாடக அரசு.!

Update: 2020-12-17 11:58 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா விரைவில் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று விடுதலையாவார் என்றும், அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.ஆனால், சசிகலாவின் அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி அவர் நீதிமன்றத்தில் செலுத்திவிட்டார். இதனால் அவரது விடுதலை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், சசிகலா விடுதலை செய்யப்படும் நாளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கர்நாடக உள்துறைக்கு உளவுத்துறை அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையில் உள்ள சில அம்சங்கள் வெளியாகியுள்ளது. அதில் சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் அவரை அழைத்து செல்வதற்கு ஏராளமான தொண்டர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வெளியே கூடுவார்கள்.

இதனால் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் சசிகலாவின் தொண்டர்கள், அவர்களது வாகனங்களை சிறை வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு வர முடியாத வகையில் எல்லையிலேயே தடுத்து நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமான கைதிகளுடன் சசிகலாவை விடுதலை செய்யாமல் அவரது பாதுகாப்பு கருதி தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
அதன்படி, மற்ற கைதிகள் இரவு 7.30 மணிக்கும் விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் சசிகலாவை இரவு 9.30 மணிக்கு பிறகே விடுதலை செய்வதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மாலை நேரங்களில் விடுதலை செய்தால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும். அதாவது சசிகலாவை அழைத்து செல்வதற்காக ஏராளமான வாகனங்களை எடுத்து வந்து தொண்டர்கள் சாலையில் நடுவே நிறுத்தும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.

அதேபோன்று சசிகலாவை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரைக்கும் உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று அங்கு அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கவும் கர்நாடக போலீசார் திட்டமிட்டுள்ளனர். உளவுத்துறையின் அறிக்கைப்படி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், விடுதலை செய்யப்படும் நாளில் சூழலுக்கு ஏற்ப, சில மாற்றங்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
 

Similar News