குடும்பத்துடன் இணைந்து ஜெ.வுக்கு கோயில் கட்டும் அமைச்சர்.. விரைவில் கும்பாபிஷேகம்.!

குடும்பத்துடன் இணைந்து ஜெ.வுக்கு கோயில் கட்டும் அமைச்சர்.. விரைவில் கும்பாபிஷேகம்.!

Update: 2020-12-16 19:50 GMT

மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்துள்ள டி.குன்னத்தூர் அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஜெயலலிதாவுக்காக கோயில் கட்டி வருகிறார். இந்த கோயிலில் 21 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு ஜெயலலிதாவின் பிரமாண்ட சிலையும், எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில வாரங்களில் வேலைகள் முடிக்கப்பட்டு ஜெயலலிதா கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சக அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டு வரும் கோயில் பணிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பார்வையிட்டார். இதன் பின்னர் அமைச்சர் பேசியதாவது: மக்கள் நலனே தன் நலன் என்று மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்தவர் ஜெயலலிதா. 1 கோடி தொண்டர்களின் குலதெய்வமாக திகழ்கிறார்.

அதிமுக இன்னும் 100 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று லட்சிய முழக்கமிட்டவர். அந்த லட்சிய முழக்கங்களை இன்றைக்கு நமது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அடிபிறழாமல் நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகாலம் மக்களுக்காக பணியாற்றும். ஏனென்றால் அம்மாவின் வாக்கு நிச்சயம் பலிக்கும். எங்களது குடும்பத்தாரும் குல தெய்வமாக அவரை வழிபட்டு வருகின்றோம். அந்த தெய்வத்திற்கு தற்போது எங்களது குடும்பத்தின் சார்பில் கோயில் கட்டி வருகிறோம்.

இந்த கோயிலில் அனைத்து மக்களும் வழிபடும் வண்ணம் அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பணி விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News