எதிர்க்கட்சியாகவும் கடுமையான தோல்வி அடைந்த காங்கிரஸ்!

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-27 17:30 GMT

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் தனது பெரும்பாலான நேரத்தை உள்கட்சி பூசலுக்கே அக்கட்சி செலவிடுகிறது என்றும் அவர் கூறினார். 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது .ஆளும் பாஜக, முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ்,ஆம் ஆத்மி இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக ஜனதா கட்சி என பன்முகப்போட்டி நிலவுகிறது.இந்நிலையில் பாஜகவில் பிரச்சார செயல்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடி குறித்து கட்சியினருடன் நமோ செயலி வாயிலாக பிரதமர் மோடி வியாழக்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸின் ஒட்டு மொத்த அடித்தளமும் பொய்கள் தான். மீண்டும் மீண்டும் பொய்களைப்பேசி சூழ்நிலையை கெடுப்பவர்களாக அக்கட்சியினர் உள்ளனர். பொய்யும் வதந்தியும் அவர்களின் ரத்தத்தில் கலந்ததாகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் விலகி எதிர்க்கட்சியாக கூட தோல்வியடைந்துவிட்டது காங்கிரஸ். பெரும்பாலான நேரத்தை உட்கட்சிப்புசலுக்காகவே செலவிடும் அந்த கட்சி நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் பேரவை தேர்தலில் பெரிய வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்தது காங்கிரஸ் .

அதன் பிறகு அம் மாநிலத்தின் வளர்ச்சி தடைப்பட்டு விட்டது. பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என்று கூறிய அந்த கட்சியால் இப்போது அரசு ஊழியர்களுக்கு கூட முறையாக ஊதியம் வழங்க முடியவில்லை .புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை. பெண்களுக்கு மாத ரூபாய் 1200 வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அராஜகங்களை யாராலும் மறக்க முடியாது. விவசாயிகளுக்கு பயிரிழப்பீடாக இரண்டு ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது போன்ற சம்பவங்கள் குறித்து மக்களிடம் பாஜகவினர் எடுத்துக் கூற வேண்டும் .பொய் கூறுவதில் நிபுணர்களான காங்கிரசார் ஹரிச்சந்திரன் முகமூடியை அணிந்துள்ளனர். அதை கிழித்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் இவ்வாறு மோடி கூறினார்.

Similar News