காஷ்மீரில் புதிய அத்தியாயத்தை பாஜக உருவாக்கி சாதனை படைக்கும் - பிரதமர் மோடி!
காஷ்மீரில் முதல் முறையாக பா.ஜ.க முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல் நடந்து வரும் காஷ்மீரில் ஏற்கனவே இரண்டு கட்ட வாக்கு பதிவு நிறைவடைந்துள்ளது. மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குபதிவு வருகிற ஒன்னாம் தேதி நடக்கிறது .இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில் அங்கு கட்சிகள் அனைத்தும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன .அங்கு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏராளமான மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார் .அப்போது அவர் கூறியதாவது :-
காஷ்மீரில் நடந்த முதல் இரண்டு கட்ட தேர்தலிலும் மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். ஏனெனில் குடும்ப ஆட்சியாளர் அவர்களை அழித்து விட்டனர். வன்முறை ரத்தத்தால் சோர்ந்து விட்டனர். எனவே அமைதி மற்றும் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். அதை பாஜகவால் மட்டுமே காஷ்மீருக்கு வழங்க முடியும் .தங்கள் துயரங்களை போக்கி கனவுகளை நினைவாக்க பாஜகவால் மட்டுமே முடியும் என மக்கள் புரிந்து கொண்டு விட்டனர் .எனவே இந்த முறை காஷ்மீரில் முதல் முறையாக பாஜக முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் .இந்த தேர்தலில் காஷ்மீர் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத போகிறது.
காஷ்மீரில் இது எனது கடைசி தேர்தல் பிரச்சார கூட்டமாகும். தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த சில நாட்களாக இங்கு பல இடங்களுக்கும் நான் பயணித்தேன். அப்போது மக்களிடையே உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது .ஊழல், பின்வாசல் வழியாக நியமனங்கள் பயங்கரவாதம், பிரிவினைவாதம், ரத்த களரி போன்றவை நிறைந்த பழைய நாட்கள் மீண்டும் திரும்புவதை மக்கள் விரும்பவில்லை .உங்கள் கனவுகளை நிறைவேற்றும் எந்த வாய்ப்பையும் மோடி தவறவிட மாட்டார். காஷ்மீருக்கு யூனியன் பிரதேசம் அந்தஸ்து தற்காலிகம் தான். பா.ஜ.க மட்டுமே காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் தரும். இவ்வாறு அவர் கூறினார்.