மல்லிகார்ஜுன கார்கே கருத்துக்கு நயந்து நாசுக்காக பதிலடி கொடுத்த அமித்ஷா!

மோடி ஆட்சியை அகற்றும் வரை சாகமாட்டேன் என்ற மல்லிகார்ஜுன கார்கேயின் கருத்துக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-30 15:45 GMT

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று முன்தினம் காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கதுவாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றிக் கொண்டு இருந்தபோது திடீரென மேடையிலேயே மயங்கி சரிந்தார். உடனே அருகில் என்ற நிர்வாகிகள் அவரைத் தாங்கிப் பிடித்து இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. பின்னர் மயக்கம் தெளிந்து மீண்டும் பேசிய கார்கே, பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை சாக மாட்டேன் எனக் கூறினார். இந்த கருத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேஜி முற்றிலும் வெறுக்கத்தக்க வகையிலும் வெட்கக்கேடாகவும் பேசுவதில் தனது கட்சியையும் தலைவர்களையும் நேற்று மிஞ்சி விட்டார். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகு தான் மடிவேன் எனக் கூறியதன் மூலம் தனது உடல்நல விவகாரத்தில் பிரதமர் மோடியை தேவையின்றி அவர் இழுத்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சியினருக்கு பிரதமர் மோடி மீது எவ்வளவு வெறுப்பு மற்றும் அச்சம் இருக்கிறது என்பதை கார்கேயின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.

அவர்கள் எப்போதும் அவரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். கார்கேஜியின் உடல் நலத்துக்காக பிரதமர் மோடி பிரார்த்திக்கிறார். நான் பிரார்த்திக்கிறேன். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என நாங்கள் எல்லோரும் பிரார்த்திக்கிறோம். அவர் பல்லாண்டு காலம் வாழட்டும். 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை மோடி ஆட்சி உருவாக்குவதை பார்ப்பதற்காக வாழட்டும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

Tags:    

Similar News