தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறும் போது, "கோவை மாவட்டத்தில் உள்ள செட்டிபாளைய பேரூராட்சியில் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளின் பேரில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி திமுக அரசின் சார்பாக துவங்கப்பட்டது. ஆனால் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு வெறும் 7 அடி ஆழம் கூட தாண்டவில்லை என்பதும், அதற்குள் வேலை முடிந்துவிட்டது எனக் கூறி திமுக அரசு ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் பைப்பை இறக்கி மூடி போட்டு விட்டது எனவும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அரைகுறையாக அரசுப் பணிகளை செய்வது என்பது அறிவாலயத்தின் இரத்தத்திலேயே ஊறிய ஒன்று போல.
இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் அவலநிலை. தமிழக மக்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, ஊழலிலும், விளம்பரங்களிலும் மட்டுமே அதிக அக்கறை செலுத்தி வரும் திமுக ஆட்சியின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. மாற்றம் வெகுதொலைவில் இல்லை" என கூறி உள்ளார்.