அடிப்படை வசதிகளற்று இருக்கும் அரசு பள்ளிகளின் நிலை: தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் கேள்வி?
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் அவர் கூறும் போது, "திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிப்பதாக வெளிவந்த காணொளியை நேற்று எனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தேன். அந்த பதிவும் காணொளியும் சமூக ஊடகங்களில் வெகுவாகப் பகிரப்பட்டதன் பின்பு தற்போது, திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அந்தப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளைக் கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மக்கள் தங்கள் அன்றாடப் பிரச்சனைகளுக்காக வெகுண்டெழுந்து போராட்டம் நடத்தினாலோ அல்லது மக்கள் முன்பு தங்கள் அலட்சியப்போக்கு அம்பலப்பட்டாலோதான், திமுக அரசு, குறைகளை சரிசெய்வதற்கான அறிவிப்பையே வெளியிடுகிறது. யாரோ ஒருவர் பின்னிருந்து "கீ" கொடுத்து இயக்கும் பொம்மையைப் போல இயக்கிக் கொண்டே இருந்தால்தான் முதல்வர் அவர்கள் இயங்குவார் போல.
தமிழகத்தில் இதுபோன்று அடிப்படை வசதிகளற்று இருக்கும் பல கல்வி நிலையங்களை எண்ணும்போது பெருங்கவலையாக உள்ளது. அப்படி கேட்பாரற்று கிடக்கும் பள்ளிகளை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு மக்கள் முன்பு அம்பலப்படுத்தினால் தான் அவையும் சரிசெய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் எண்ணினால் அதையும் செய்ய நான் தயாராக உள்ளேன்" என கூறினார்.