கீழடி அகழாய்வு கண்டுபிடிப்பு: இந்திய தொல்லியல் துறை எடுத்த உறுதி!

Update: 2025-07-26 06:09 GMT

கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதிபூண்டுள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், கீழடி அகழாய்வுக்கு தலைமை ஏற்ற தொல்பொருள் ஆய்வாளரின் அறிக்கை நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டது என்றும் அவரது ஒப்புதலுடன் நிபுணர்களின் முடிவுகளையும் இணைத்து அதிகாரப்பூர்வ அறிக்கையை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது என்றும் கூறினார்.


கீழடி அகழாய்வின் தலைமை ஆய்வாளர் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு நிபுணர்களின் கருத்துகள் அவருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வைகை நதிப்படுகையில் உள்ள கீழடியில் தொல்பொருள் ஆய்வுக்கான இடங்களை தென்னிந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டறிந்தது. இதையடுத்து முக்கியமான இடங்களில் மாநில தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் கல்வி நிறுவனங்களால் 2014-15, 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த அகழாய்வு தொடர்பான அறிக்கையை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை 2024 பிப்ரவரி 29 அன்று உத்தரவிட்டதை அடுத்து நடைமுறையில் உள்ள விதிகளின்படி தலைசிறந்த நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்களையும் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.

Similar News