கர்நாடகா அரசை பார்த்து தமிழகத்தை ஆளும் திமுக அரசு சமூகநீதியின் நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுமாறு அன்புமணி ராமதாஸ் அவர்கள் தி.மு.கவில் பார்த்து தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் பொழுது, "பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து சரியாக 369-ஆம் நாளில் அதற்கான பரிந்துரை அறிக்கையை கர்நாடக அரசு பெற்றிருக்கிறது. ஆனால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1224 நாள்கள் ஆகும் நிலையில் தமிழக அரசும், ஆணையமும் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. ஆணையம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், அதைக் காட்டி வன்னியர்களை திமுக அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
கர்நாடகத்தில் நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, சரியாக 165-ஆம் நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முழுமையான பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஆனால், நீதியரசர் பாரதிதாசன் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையிடப்பட்டு இன்றுடன் 937 நாள்களாகின்றன. இதுவரை 6 முறை காலநீட்டிப்பு வாங்கியதைத் தவிர வேறு எதையும் ஆணையம் செய்யவில்லை.
பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான தரவுகள் இல்லை என்பதை 35 நாள்களில் கண்டறிந்த நாகமோகன் ஆணையம், அதை கர்நாடக அரசிடம் இடைக்கால அறிக்கை மூலம் தெரிவித்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அன்றே அனுமதி பெறுகிறது. ஆனால், தமிழகத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான தரவுகள் இல்லை என்பதை கண்டறியவே ஆணையத்திற்கு 30 மாதங்கள் ஆகியுள்ளது.
சமூகநீதி சார்ந்து அரசால் அமைக்கப்படும் அனைத்து ஆணையங்களுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் உரிமை என்ற தனது அதிகாரத்தை கர்நாடக ஆணையம் மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு கூறிவரும் பொய்யை மறுப்பதற்கு கூட திராணியில்லாமல் ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.