ஐக்கிய ஜனதாவிலிருந்து பா.ஜ.க-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏக்கள் -  அருணாச்சல பிரதேச 'ஷாக்'!

ஐக்கிய ஜனதாவிலிருந்து பா.ஜ.க-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏக்கள் -  அருணாச்சல பிரதேச 'ஷாக்'!

Update: 2020-12-25 17:14 GMT
அருணாச்சல பிரதேசத்தில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக, அதன் 7 எம்.எல்.ஏ-க்களில் 6 பேர் ஆளும் பா.ஜ.க-வுக்கு கூண்டோடு மாறியுள்ளனர் என்று அம்மாநில சட்டமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அருணாச்சல் மக்கள் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ-வான லிகாபாலி தொகுதியைச் சேர்ந்த கர்டோ நைகியோரும் பா.ஜ.க-வில் ஐக்கியமாகியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்த்தில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி வாக்கெடுப்பு முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், ஒரு நாள் முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது. ஆறு ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் முன்னதாக தலேம் தபோவை புதிய சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்து அவர் தலைமையில் தனியாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது பா.ஜ.க-வில் ஐக்கியமாகியுள்ளனர்.

இதே போல் அருணாச்சல் மக்கள் கட்சியின் எம்.எல்.-ஏவும் இந்த மாத தொடக்கத்தில் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பா.ஜ.கவுடன் கைகோர்த்துள்ளார். "கட்சியில் சேர விருப்பத்தை தெரிவிக்கும் அவர்களின் கடிதங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்" என்று பா.ஜ.க-வின் அருணாச்சல பிரதேச தலைவர் பி.ஆர்.வாகே கூறினார்.

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், 2019 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 15 இடங்களில் ஏழு இடங்களை வென்றது. மேலும் 41 இடங்களைப் பிடித்த பா.ஜ.க-வுக்குப் பிறகு இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. பீகாரில் பா.ஜ.க-வுடன் இணைந்து நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை நடத்தி வரும் நிலையில், அருணாச்சலில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு தாவியுள்ளது நிதீஷ்குமாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தற்போதைய கட்சித் தாவலைத் தொடர்ந்து, பா.ஜ.க இப்போது 60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சல பிரதேச சட்டசபையில் 48 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் பலம் ஒன்றாக குறைந்துள்ளது. தற்போது அருணாச்சல பிரதேச சட்டசபையில் இரண்டாவது பெரிய கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar News