சசிகலாவை சந்தித்த கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் நீக்கம்.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதிரடி நடவடிக்கை.!

சசிகலாவை சந்தித்த கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் நீக்கம்.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதிரடி நடவடிக்கை.!

Update: 2021-02-04 08:37 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற சசிகலா பெங்களூரு அருகே உள்ள ஹெப்பாலில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். அவரை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் சந்தித்து பேசியதாக கூறப்படும் நிலையில், அவரை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாகவே அதிமுகவில் ஒரு சில மாவட்டங்களில் கீழ் மட்டத்தில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள் சசிகலா வருகை குறித்து போஸ்டர்கள் தயார் செய்து அதனை சுவர்களில் ஒட்டி வருவதை பார்க்க முடிகிறது. அது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒன்றிய துணை செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் உள்ளிட்டவர்களை அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நீக்கி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், கர்நாடக அதிமுக செயலாளர் யுவராஜ் சமீபத்தில் சொகுசு விடுதியில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இது பற்றிய வீடியோ காட்சிகளும் வெளியாகியது. இதனிடையே சசிகலாவை சந்தித்த யுவராஜ் தற்போது கர்நாடக மாநில செயலாளர் பதவியிலிருந்து மட்டுமின்றி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நீக்கம் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்திலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கர்நாடக மாநிலக் கழகச் செயலாளர் யுவராஜ், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News