விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிடும் பாகிஸ்தான் மற்றும் சீனா - மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு.!

விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிடும் பாகிஸ்தான் மற்றும் சீனா - மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு.!

Update: 2020-12-10 18:00 GMT

விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் சீனா, மற்றும் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான ரோசாஹேப் தான்வே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நுகர்வோர் விவகாரங்களுக்கான மத்திய இணையமைச்சர் தான்வே, மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முயலும் விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பின்னால் சீனாவும் பாகிஸ்தானும் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தின் பத்னாபூர் தாலுகாவில் உள்ள கோல்டே தக்லியில் ஒரு சுகாதார மையத்தின் தொடக்க விழாவில் தான்வே கீழ்க்கண்டவாறு பேசினார். நடந்து கொண்டிருக்கும் போராட்டம் விவசாயிகளுடையது அல்ல. இதற்குப் பின்னால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு கை இருக்கிறது. இந்த நாட்டில் முஸ்லீம்கள் முதலில் தூண்டிவிடப்பட்டனர்.

அவர்களுக்கு என்ன சொல்லப்பட்டது?  NRC வருகிறது,  CAA வருகிறது, முஸ்லீம்கள் ஆறு மாதங்களில் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். ஒரு முஸ்லீம் ஆவது வெளியேறினாரா? "அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இப்போது விவசாயிகள் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இது மற்ற நாடுகளின் சதி" என்று தான்வே கூறினார்.

எனினும், விவசாயிகளின் போராட்டங்களுக்குப் பின்னால் இரு அண்டை நாடுகளும் உள்ளன என்று அவர் எந்த அடிப்படையில் கூறினார் என்பதை அமைச்சர் விரிவாகக் கூறவில்லை.

"அரசாங்கம் கோதுமையை கிலோ ரூ 24 க்கும், அரிசியை கிலோ ரூ 34 க்கும் வாங்குகிறது. மக்களுக்கு முறையே கிலோ ரூ 2 மற்றும் ரூ 3 விலையில் கொடுக்கிறது. இதற்கான மானியத்திற்காக அரசு ரூ 1.75 லட்சம் கோடியை செலவிடுகிறது. விவசாயிகளின் நலனுக்காக அரசாங்கம் பணத்தை செலவிடுகிறது" என்று நுகர்வோர் விவகார அமைச்சர் தான்வே கூறினார்.

"மத்திய அரசின் இந்த முயற்சிகள் விவசாயிகளுக்காக பணத்தை செலவழிக்கத் தயாராக இருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் மற்றவர்கள் அதை விரும்பவில்லை" என்று அவர் மேலும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் பிரதமர் என்றும் அவரது முடிவுகள் எதுவும் விவசாயிகளுக்கு எதிராக இருக்காது என்றும் தான்வே உறுதியளித்தார். 

 

Similar News