பா.ஜ.கவின் அடுத்த இலக்கு என்ன - பீதியில் எதிர்க்கட்சிகள் ?

பா.ஜ.கவின் அடுத்த இலக்கு என்ன - பீதியில் எதிர்க்கட்சிகள் ?

Update: 2020-11-12 08:27 GMT


பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மையை அளித்துள்ளன. பொதுவாக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை இரண்டு முறை ஆட்சியில் இருந்தாலே உருவாகிவிடும், ஆனால் நான்காவது முறையாக ஆட்சியை பிடித்து இருப்பது சாதாரண விஷயம் அல்ல.

MGB என அழைக்கப்படும் மகாகத்பந்தன் ஒரு வலுவான எதிர் கூட்டணி ஆகவே இருந்தது. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான RJD, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அவற்றில் முக்கியமான சில கட்சிகள்.

243 பேர் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் NDA 125 இடங்களை கைப்பற்றியது. MGB, 110 இடங்களையும், சிராக் பஸ்வான் தலைமையிலான LJP கட்சி ஒரு இடத்தையும் சுயேட்சை உட்பட மற்றவர்கள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

நேற்று முழுவதும் 11 மாநிலங்களில் நடந்து முடிந்து வெளியான இடைத்தேர்தல் முடிவுகளில் 56 இடங்களில் நாற்பதை கைப்பற்றிய பா.ஜ.க தொண்டர்களுக்கு தீபாவளி முன்கூட்டியே வந்துவிட்டது என தான் கூறவேண்டும். சிந்தியா, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.கவிற்கு வலு சேர்க்க 28 இடங்களில் 19 கைப்பற்றியது.

உத்தரப்பிரதேசத்தில் இதேபோல் 7 இடங்களில் ஆறை பா.ஜ.க பெற்றது. 2020 கிட்டத்தட்ட முடியும் தருவாயில் பா.ஜ.கவிற்கு இது மிகவும் நல்ல விதமாகவே முடியப்போகிறது. இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று பார்த்தால் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருக்கும் மேற்கு வங்காளம் ஆகத்தான் இருக்க வேண்டும்.

2021 மே மாதத்தில் மேற்குவங்க சட்டசபையின் 294 இடங்களுக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளன. மே 20, 2011 முதல் 65 வயதான மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக இருந்து வருகிறார். முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரான இவர் 1970-களில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

1998ல் தனது சொந்த திரிணாமுல் காங்கிரசை நிறுவிய அவரின் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலும் முன்னாள் கம்யூனிஸ்ட் காரர்களாக இருந்தனர்.

மேற்குவங்க தேர்தல்களை ஜெயிப்பதற்கு பா.ஜ.க சமீப காலங்களில் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக திரிணாமுல் காங்கிரசின் செல்வாக்கு மிகுந்த தலைவரான முகுல் ராய் பா.ஜ.கவில் இணைந்தார். அவர் பா.ஜ.க தேசிய துணைத் தலைவராக செப்டம்பரில் ஆனார்.

2016 தேர்தல்களில் மம்தா பானர்ஜி மறுபடியும் வெற்றி பெற்றபோது பாஜகவால் 294ல் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் 2016 முதல் தற்போது வரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி மூலம் எண்ணிக்கையை 15 ஆக அதிகரித்துக் கொண்டது.

2019 பொதுத் தேர்தல்களில் 42 தொகுதிகளில் 18 லோக்சபா இடங்களை பா.ஜ.க கைப்பற்றியது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களைப் பெற்றது. 2014ல் திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களை வென்றிருந்தது.

லோக்சபா தேர்தல் முடிவுகள் மேற்குவங்க அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தின. தங்களுக்கு சாதகமாக அரசியல் சமன்பாட்டை பா.ஜ.க திருப்பியது. அதன் வெற்றி, ஆளுங்கட்சி அதிகமாக வென்று இருந்தபோதும் அதை முழுவதும் மறைத்தது.

"லோக்சபா தேர்தலுக்கு நாங்கள் 23 தொகுதிகள் வெல்ல வேண்டும் என இலக்கு வைத்து இருந்தோம். 18ல் வெற்றி பெற்றோம். அதேபோல நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் 250 களில் இடங்களை வெல்ல இலக்கு வைத்திருக்கிறோம். அதற்கேற்றார்போல் முயற்சியும் உழைப்பும் கொடுப்போம்" என இந்த வருட ஜூலையில் பா.ஜ.க தலைவர் கைலாஷ் விஜய்வர்கிய கூறினார்.

சமீபத்தில் பாஜக தலைவர் ஜேபி. நட்டா மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேற்குவங்க தேர்தல்களை வெல்ல தீவிரமான யுக்திகளை பா.ஜ.க வகுத்து வருகிறது.

Similar News