சசிகலா உடல்நலக்குறைவுக்கு யார் காரணம்.? வழக்கறிஞர் ராஜராமன் கேள்வி.!

சசிகலா உடல்நலக்குறைவுக்கு யார் காரணம்.? வழக்கறிஞர் ராஜராமன் கேள்வி.!

Update: 2021-01-23 15:48 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சசிகலாவிற்கு கடந்த வாரம் முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு சிறையிலேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவரை விக்டோரியா மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் வருகின்ற ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சசிகலா திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று அவரது வழக்கறிஞர் ராஜராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: மருத்துவமனையில் அனுமதிக்கும்போது சசிகலாவிற்கு கொரோனா இல்லை. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சிறையில் காய்ச்சலால் கிட்டத்தட்ட ஒரு வாரம் இருந்துள்ளார். இதன் பின்னரே அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட பின்னரே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

முதலில் சி.டி.ஸ்கேன் வசதி இல்லாத மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சசிகலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கக்கோரியும் அனுமதிக்காமல் அரசு மருத்துமனையில் சேர்த்துள்ளனர். சிறைத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Similar News